சுவிஸர்லாந்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தமிழர்களை சந்தித்த தலைலாமா

244

திபேத்திய ஆன்மீகத் தலைவரும், இந்தியாவில் புகலிடம்பெற்று வாழ்ந்து வரும் திபேத்திய இனத் தலைவருமான 14வது தலைலாமா அவர்கள் சுவிஸ் பேர்ன் மாநில மற்றும் சுவிஸ் நடுவன் அரசின் சிறப்பு அழைப்பினை ஏற்று இன்று சுவிஸர்லாந்திற்கு வருகைதந்துள்ளார்.

அவருக்கான அரச வரவேற்பு பல்சமய இல்லத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 07.00 மணி முதல் புலம்பெயர்ந்து வாழும் பலநூறு திபேத்தியர்கள் அவரின் வருகைக்காக பல்சமய இல்லத்தின் முன்றலில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

பல இளவயதினரும், சிறியோர்களும் தமது திபேத் பாரம்பரிய உடையுடன் வருகைதந்திருந்தனர். பல்பண்பாட்டு நிகழ்வுகளையும் முன்றலில் ஆற்றினர். 12.30 மணிக்கு தலைலாமா வருகைதந்தார்.

சுவிஸ் அரசின் சிறப்புக் காவற்துறையினரும், தனியார் பாதுகாப்பு நிறுவனமும் பாதுகாப்பு அளிக்க உள்நுழைந்தார். சீனப்பேரரசின் அறிவிக்கப்படாத முதல் எதிராய் தலைலாமா விளங்குகிறார். ஆகவே இவருக்கான சிறப்புப் பாதுகாப்பு அவர் செல்லும் இடங்களில் எல்லாம் வழங்கப்படுகிறது.

உள்நுழைந்த தலைலாமா அவர்களை எட்டு சமயத் தலைவர்களும், பேர்ன் மாநில அரச தலைவரும், நடுவன் அரசின் பிரதிநிதிகளும் வரவேற்றனர்.

சைவநெறிக்கூடம் – அருள் ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட் சுனையர்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

தலைலாமா அவர்களுக்கான விருந்தளிப்பினை சைவ நெறிக்கூடம் பொறுப்பேற்றிருந்தது. ஈழத் தமிழ்ச் சைவ உணவு சைவ நெறிக்கூடத்தால் சமைக்கபட்டடிருந்தது இவ்விருந்தோம்பலின் சிறப்பாகவும், யாவரையும் கவர்ந்த விடயமாகவும் அமைந்தது.

உணவினை வழங்கிய யாவரும் ஈழத் தமிழ்ப் பெண்களா இருந்தனர். இவர்கள் தமிழ்ப் பாரம்பரிய உடையணிந்து உணவு வழங்கினர். சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்ட 150 விருந்தினர்கள் இவ்விருந்தோம்பலில் பங்கெடுத்திருந்தனர்.

குறிப்பாக சுவிஸ் அரசியல் பிரமுகர்களும் சுவிஸ் அதிகாரிகளும், பல்சமயத் தலைவர்களும் அழைக்கப்பட்டிருந்த விருந்தாளிகளில் அடங்குவர்.

விருந்தோம்பலிற்கு அடுத்து பேராளர் உரையரங்கு நடைபெற்றது. அதற்கு மேலும் 150 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

விருந்தோம்பலை அடுத்து வரவேற்பு உரையினை பேர்ன் அரசதலைவர் சப்பேர் அவர்கள் ஆற்றினார்கள். பல்சமய இல்லத்தின் அறக்கட்டளைத் தலைவியாக விளங்கும் கேர்டா கௌவுக் அவர்கள் பல்சமயத்தின் பெயரில் வரவேற்புரை ஆற்றினார்.

அடுத்த நிகழ்வாக தலைலாமா அவர்கள் அருள் ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலுக்குள் நுழைந்தார். செந்தமிழ்த் திருமறை வழிபாடு கருவறையில் நடைபெறும் திருக்கோவில் இதுவாகும்.

கோவிலுக்குள் வருகையளித்த தலைலாமா அவர்களை செந்தமிழருட்சுனையர்கள் திருநிறை. சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார், திருநிறை. திருச்செல்வம் முரளிதரன், திருநிறை. சிவலிங்கம் சுரேஸ்குமார், திருநிறை. குழந்தை விக்னேஸ்வரன், திருநிறை. இராஜேந்திரன் கிரிதரன், திருநிறை. நடராஜா தர்மசீலன், திருநிறை. காராளசிங்கம் விஜயசுரேஸ், திருநிறை. நாகராச ஜெயக்குமார், திருநிறை. தர்மசீலன் கலாமதி, திருநிறை. வசந்தமால ஜெயக்குமார், திருநிறை. தர்னன் செல்லையா மற்றும் சைவநெறிக்கூடுத்தின் மதியுரைஞர்கள் திருநிறை. சிவயோகநாதன் ஐயா (நடராஜா யோகேந்திரன்), திருநிறை. வினாசித்தம்பி தில்லையம்பலம் மற்றும்ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அடியார்கள், குழந்தைகள் முன்வந்து வரவேற்றனர்.

ஈழத்தில் இருந்து வருகை தந்திருந்த திருநிறை. மதுசூதனன் குழுவினர் மங்கள இசைவழங்க, தலைலாமா அவர்கள் தமிழ்ச் செல்வங்கள் சூழ்ந்து பூங்கொத்து அளிக்க, திருக்கோவிலை வலம் வந்து ஞானலிங்கேச்சுரத்தில் ஈழத்தின் வடிவத்தி அமையப்பெற்றிருக்கும் ஈகைலிங்கத்திற்கு சிறப்பு வழிபாட்டினை செந்தமிழ் முறையில் ஆற்றினார்.

சூழந்திருந்த குழந்தைகளும், அருட்சுனையர்களும் செந்தமிழ்த் திருமறை ஓதினர். இதற்கடுத்து கருவறையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஞானலிங்கேச்சுரருக்கு சிறப்பு வழிபாட்டினை செய்தார்.

மலர்களை அர்ச்சித்தும், நிறைவில் தீபவழிபாடு ஆற்றியும் தலைலாமா எம்பெருமானை வலம்வந்தார். வழிபாட்டின் நிறைவில் சைவநெறிக்கூடத்தின் சார்பில் தலைலாமா அவர்களுக்கும், பேர்ன்மாநில அரசதலைவருக்கும் சிறப்பு மதிப்பளிப்பு பூமாலை அணிவித்தும், சைவநெறிக்கூடத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட பொன்னாடைபோர்த்தியும் மதிப்பளித்தனர்.

அதி உச்ச பாதுகாப்பினை சுவிஸர்லாந்து காவல்துறை வழங்கியதுடன் திபேத் நாட்டிலிருந்து சுவிஸர்லாந்தில் அரசில் தஞ்சம் கோரியுள்ள பல நுாற்றுக்கணக்கான மக்கள் பல்சமய இல்லத்திற்கு முன்னால் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மிக குறைவானவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

SHARE