சுவிட்சர்லாந்து நாட்டில் போலி திருமணம் மூலம் குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர்களின் குடியுரிமை உடனடியாக ரத்து செய்யப்படும் என அந்நாட்டு குடியமர்வு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுவிஸ் குடியமர்வு அதிகாரிகள் இன்று செய்தியாளர்களின் சந்திப்பில் ஒரு அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், சுவிஸ் நாட்டு சட்டப்படி சுவிஸ் குடிமகன்/குடிமகளை ஒரு வெளிநாட்டினர் போலியாக திருமணம் செய்து சுவிஸ் குடியுரிமை பெற்றுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டால், அவருடைய குடியுரிமை 8 வருடங்கள் வரை ரத்து செய்யப்படும்.
இதுபோன்ற குற்றங்கள் ஆண்டுக்கு 60 என்ற எண்ணிக்கையில் நிகழ்வதாகவும், அவர்கள் அனைவரின் குடியுரிமை பறிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமில்லாமல், இக்குற்றத்தில் ஈடுப்படும் வெளிநாட்டினருக்கு எந்த நாட்டு குடியுரிமை இல்லாத நிலைக் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உதாரணத்திற்கு, அங்கோலா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் சுவிஸ் குடிமகளை திருமணம் செய்து அதன் மூலம் குடியுரிமை பெற்றுள்ளார்.
ஆனால், கடந்த 2008ம் ஆண்டு அவர்களது திருமணம் விவாகரத்தில் முடிந்ததால், அந்த நபரின் குடியுரிமை பறிக்கப்பட்டது.
மேலும், அந்த நபரிடம் அங்கோலா நாட்டு கடவுச்சீட்டு இல்லாததால் அவர் எந்த குடியுரிமையும் பெற முடியாத சூழல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, திருமணம் மூலம் சுவிஸ் குடியுரிமை பெறும் வெளிநாட்டினரின் ஆவணங்கள் மற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.