சுவிஸில் புகலிடம் கோரியுள்ள இலங்கையர்கள் குறித்த விபரங்கள் வெளியானது..!

180

சுவிட்சர்லாந்து நாட்டில் கடந்தாண்டு மட்டும் புகலிடம் கோரி சென்ற இலங்கை குடிமக்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸில் புகலிடம் கோரி வந்த வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை கடந்த 2015-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2016-ம் ஆண்டில் 31 சதவிகிதம் குறைந்துள்ளதாக அந்நாட்டு குடியமர்வு துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, 2016-ம் ஆண்டில் சுவிஸில் புகலிடம் கோரி புதிதாக 27.207 வெளிநாட்டினர்கள் சென்றுள்ளனர். இதே நிலை நீடித்தால், 2017-ம் ஆண்டின் இறுதியில் 24,500 புதியவர்கள் வரலாம் என சுவிஸ் அதிகாரிகள் கணித்துள்ளனர்.

சுவிஸ் எல்லை நாடுகளில் புலம்பெயர்ந்தவர்கள் நுழையாதவாறு தடுப்புகளை ஏற்படுத்தியது தான் இந்த எண்ணிக்கை குறைவிற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

2016-ம் ஆண்டில் சுவிஸில் புகலிடம் கோரி எரித்ரியா – 5.178, ஆப்கானிஸ்தான் – 3,229, சிரியா – 2,144, சோமாலியா – 1,581, இலங்கை – 1,373 மற்றும் ஈராக் – 1,312 ஆகியவர்கள் புகலிடம் கோரி சென்றுள்ளனர்.

அதாவது, சுவிஸில் ஏற்கனவே புகலிடம் கோரி காத்திருக்கும் இலங்கை குடிமக்களை தவிர்த்து கடந்தாண்டு மட்டும் 1,373 பேர் இலங்கையில் இருந்து சுவிஸிற்கு புகலிடம் கோரி சென்றுள்ளனர்.

கடந்தாண்டு யூன் மாதத்திற்குள் இலங்கையை சேர்ந்த 5,000 நபர்களுக்கும் அதிகமாக சுவிஸில் புகலிடம் அளிக்கப்பட்டது. இவர்களில் 3,674 நபர்களுக்கு ‘அகதிகள்’ என்ற அந்தஸ்த்து வழங்கப்பட்டது.

மேலும், இதே ஆண்டு இலங்கையை சேர்ந்த 1,613 நபர்களுக்கு தற்காலிக புகலிடம் அளிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக, தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் இலங்கையை சேர்ந்த சுமார் 50,000 பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE