சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் 15வது தடவையாக நடாத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா கடந்த 13ஆம், 14ஆம் திகதிகளில் சூரிச் வின்ரத்தூர்நகரில் அமைந்துள்ள SportanlageDeuttweg மைதானத்தில் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது.
புலம் பெயர்ந்து வாழும் எமது இளம் தலைமுறையினரிடம் தாயகம் நோக்கிய தேடலை ஏற்படுத்தும் நோக்கில் தமிழர் இல்லம் இச்சுற்றுப் போட்டியினை நடாத்திவருகின்றது.
நடைபெற்று முடிந்த இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான அணிகள் வருகைதந்திருந்தன.
இருதினங்களும் காலை 09.00 மணியளவில் சுவிஸ் மற்றும் தமிழீழத் தேசியக்கொடியேற்றலைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் விளையாட்டு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன் தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல், வீரர்கள் உறுதிப்பிரமாணம் எடுத்தல் என்பவற்றுடன் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இலங்கை அரசின் திட்டமிட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட வள்ளிபுனம் செஞ்சோலைவளாக மாணவச் செல்வங்களின் 10ஆம் ஆண்டு நினைவுநாளான கடந்த 14ஆம் திகதி விளையாட்டுவிழாவில் ஈகைச்சுடர் மலர் வணக்கத்துடன் நினைவு கூரப்பட்டது.
ஆண்கள் பெண்களுக்கான உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிளித்தட்டு, துடுப்பாட்டம், முதலான குழு விளையாட்டுக்களில் இம்முறை அதிக எண்ணிக்கையிலான அணிகள் களமிறங்கியதுடன் உதைபந்தாட்டப் போட்டியில் ஒவ்வொரு வயதுப்பிரிவிலும் பலஅணிகள் மோதின.
வளர்ந்தோர் உதைபந்தாட்ட இறுதியாட்டம் சனிக்கிழமையன்று இரவு மின்னொளியில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இரு நாட்களும் இடம்பெற்ற மென்பந்து துடுப்பாட்டபோட்டியில் இம்முறை 40 அணிகள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
சிறுவர்கள் மற்றும் இளையோர்களுக்கான தடகளப் போட்டிகளிலும் இவ்வருடம் பல போட்டியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டமையை அவதானிக்க முடிந்தது.
சனி மற்றும் ஞாயிற்று கிழமை மாலைகளில் இடம்பெற்ற சங்கீதக்கதிரை, எமது பாரம்பரிய விளையாட்டுக் களானதாச்சி (கிளித்தட்டு), தலையணை அடி, கண்கட்டி முட்டி உடைத்தல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்க பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் முண்டியடித்தமையை காணமுடிந்தது.
போட்டிகள் முடிந்தவுடன் மிகவும் நட்புடனும், விளையாட்டு உணர்வுடனும் நடந்து கொண்டமையானது சிறப்பான அம்சமாக அமைந்திருந்ததோடு போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு சுற்றுக்கிண்ணங்களோடு வெற்றிக்கிண்ணங்களும், பதக்கங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
எதிர்காலத்தில் விளையாட்டுத் துறையில் அனைத்துலக ரீதியில் சாதிக்க கூடிய திறமை மிக்க தமிழ் இளந்தலைமுறையினர் புலம் பெயர்ந்த நாடுகளில் வளர்ந்து வருகின்றமையை இம்முறை விளையாட்டு விழாவில் அவதானிக்க முடிந்தது.
இது போன்ற விளையாட்டு நிகழ்வுகள் மூலம் புலத்திலுள்ள இளையோர் மத்தியில் தாயகம் குறித்த புரிதல் விரிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.