சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் யாழ் வருகை!

316

இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்துள்ள சுவிஸ் வெளியுறவு அமைச்சர் பப்வ் புறுக்ஹெல்டர் யாழில் பலதரப்புக்களுடனும் இன்று சந்திப்புக்களினை நடத்தியிருந்தார்.

இலங்கைக்கு சுவிஸ் வெளியுறவு அமைச்சர் மேற்கொள்ளும் முதல் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும். புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இவரது வருகை அமைந்திருந்தது.

வடக்கு முதல்வரை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் யாழ்.மாவட்டத்தினில் உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகளினில் மக்கள் காணிகள் விடுவிப்பு தொடர்பாக கேட்டறிந்து கொண்டார். அத்துடன் தற்போதை சூழல் குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னரான வாழ்வு தொடர்பினில் அவர் கேட்டறிந்து கொண்டார்.

முன்னதாக விமானப்படை விமானம் மூலம் பலாலியை வந்தடைந்த அவர் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட தொண்டமனாறு அக்கரை பகுதியில் சுவிஸ் உதவியில் கட்டிமுடித்து வழங்கப்பட்ட வீடுகளை உத்தியோகபூர்வமாக அவர் பயனாளிகளிடம் அவர் கையளித்திருந்தார்.

1985ம் ஆண்டு முதல் உயர்பாதுகாப்பு வலயமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இப்பகுதி கடந்த ஆண்டில் படையினர் வெளியேறியதையடுத்து கைவிடப்பட்ட பகுதியாகியிருந்தது. இதனையடுத்து அப்பகுதியில் மக்கள் குடியேறியிருந்தனர்.அவர்களிற்கே சுவிஸ் அரசு வீடுகளை கட்டிவழங்கியிருந்தது.

வழமையாக கடந்த காலங்களினில் அரச பிரமுகர்கள் கலந்து கொள்ளும் ஆடம்பர நிகழ்வுகளாக இத்தகைய கையளிப்பு நிகழ்வுகள் இருப்பதுண்டு. எனினும் இம்முறை வழமைக்கு மாறாக அமைதியாக கையளிப்பு நிகழ்வு நடந்திருந்தது. எத்தகைய பாதுகாப்பு கெடுபிடிகள் கூட இருந்திருக்கவில்லை.

 

SHARE