சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு மாற்று காணி தருமாறு விவசாயிகள் கவனயீர்ப்பு ஊர்வலம்!

229

வவுனியாவில் மேற்கொள்ளப்படும் நகர நீர் விநியோகத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட பேராறுதிட்டத்தில் சுவீகரிக்கப்பட்ட வயல்காணிகளுக்கு மாற்றுக்காணிகள் இதுவரை தரப்படவில்லை என தெரிவித்து, விவசாயிகளால் கவனயீர்ப்பு ஊர்வலமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

சாஸ்திரிகூழாங்குளம், பண்டாரபெரியகுளத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட வயல்காணிகளுக்கு மாற்றுக்காணிகள் தரப்படவில்லை எனதெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக இருந்து மாவட்ட செயலகம் வரை ஊர்வலமாக சென்றிருந்தனர். இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார அவர்களிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.

இதுதொடர்பில் விவசாயிகள் தெரிவிக்கையில்,

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் நகருக்கான நீர்வழங்கல் திட்டமொன்று 2007 ஆம் ஆண்டளவில் நீர்வழங்கல் சபையால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதற்காக பேராறு ஆற்றுக்கு குறுக்காக நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு நீர் வழங்குவதே அத்திட்டமாக இருந்தது.

இத்திட்டத்திற்காக 65 குடும்பங்களுக்கு சொந்தமான 167 ஏக்கர் வயல் நிலங்கள் சுவிகரிக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் ஆகிய நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். இதனடிப்படையில் விவசாயிகளினால் முற்தரப்பு ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டது. அதன் பிரகாரம் நிபந்தனையுடன் விவசாயிகள் காணிகளை விட்டுக்கொடுத்திருந்தனர்.

இதனடிப்படையில் சுவீகரிக்கப்பட்ட காணிகளின் தரத்துக்கு ஏற்ற காணிகளை ஒருவருடத்திற்குள் காடுகள் அழிக்கப்பட்டு புதிய இடத்தில் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும் மூன்று வருடங்கள் கடந்த நிலையிலும் 14 குடும்பங்களுக்கு 37 ஏக்கர் வயல் நிலங்கள் மாத்திரமே கடந்த மாதம் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் சுவீகரிக்கப்பட்ட வயல்களுக்கு சமமான தரத்தில் இல்லை எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இத்துடன் அண்மையில் விவசாயிகளுக்கு சிறுதொகைப்பணத்தை வழங்கி வயல்களை துப்பரவு செய்து எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தெரிவித்திருந்தனர். எனவே தற்போது காலபோகம் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஏனைய பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் காணிகளை வழங்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (8) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (9) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (10) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (11)

 

 

 

SHARE