சூடுபறந்த ஜெனீவா அறிக்கை மீதான விவாதம் ! செங்கோலைத் தூக்கிச் சென்ற தினேஷ் குணவர்த்தன

224
போர்க்குற்றங்கள் தொடர்பான ஜெனீவா அறிக்கையின் மீது இன்று நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தின் போது தினேஷ் குணவர்த்தன செங்கோலைத் தூக்கிச் சென்றதால் கடும் அமளி ஏற்பட்டது.

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஜெனீவா அறிக்கை மீது இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் ஆரம்பமானது.

ஆளுந்தரப்பில் திறனபிவிருத்தி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் மஹிந்த சமரசிங்க விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றினார்.

அவரது உரை முடிந்தவுடன் சபைக்குத் தலைமை வகித்த முஜிபுர் ரஹ்மான், அடுத்து உரையாற்ற மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம். சுவாமிநாதனை அழைத்தார்.

இதனையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கடும் கூச்சல் எழுந்தது. சுவாமிநாதனுக்கு முன்னதாக விமல் வீரவன்ச உரையாற்ற அனுமதிக்குமாறு அவர்கள் கூச்சலிட்டார்கள்.

எனினும் தனக்கு வழங்கப்பட்டுள்ள பட்டியலின் பிரகாரமே ஒவ்வொருவரையும் உரையாற்ற அனுமதிக்க முடியும் என்று முஜிபுர் ரஹ்மான் தெரிவித்ததையடுத்து, சபையில் கடும் அமளி ஏற்பட்டது.

இந்த அமளிக்கிடையே நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன சபையிலிருந்து செங்கோலைத் தூக்கிக் கொண்டு ஓட முற்பட்டார். இது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அமளிதுமளி ஏற்படக் காரணமாக அமைந்ததுடன் சபை நடவடிக்கைகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் துணைப் படைக்கலச் சேவிதர் தினேஷ் குணவர்த்தன கையில் இருந்து செங்கோலை மீட்டெடுத்த பின்னர் நாடாளுமன்ற அமர்வு மீண்டும் ஆரம்பமானது.

இதன் பின்னர் உரையாற்றும் வாய்ப்பு விமல் வீரவன்சவுக்கு வழங்கப்பட்டது

SHARE