சூறையாடப்படும் புல்லுமலை கிராமத்தின் நீர் வளங்கள் – பாலைவனமாக மாறப்போகும் தமிழ் கிராமங்கள்

127

arpaகடந்த உள்ளுராட்சி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் ஒன்றான செங்கலடி பிரதேச சபையை ( ஏறாவூர்பற்று ) பிள்ளையான் குழுவின் ஆதரவுடன் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா மாவட்ட அமைப்பாளராக இருக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி கைப்பற்றிய போது தமது பிரதேசம் அபிவிருத்தி அடையும் என சிலர் நம்பினர்.

தமிழ் பிரதேசம் ஒன்று அமைச்சர் ஹிஸ்புல்லாவின் கைகளுக்கு செல்வது தமிழ் மக்களுக்கு எவ்வளவு ஆபத்து என்பதற்கு புல்லுமலையில் அமைக்கப்படும் மஹா மினரல் வோட்டர் தொழிற்சாலை ஒரு எடுத்துக்காட்டாகும்.

செங்கலடி பிரதேசசபை சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அதிகாரத்தில் இருப்பதை பயன்படுத்தி புல்லுமலை பிரதேசத்திற்கு மட்டுமல்ல அதனை அண்டிய பல கிராமங்களின் நீர்வளங்களை சுரண்டும் தண்ணீர் தொழிற்சாலைக்கான அனுமதி பெறப்பட்டிருக்கிறது.

இந்த தொழிற்சாலை தனக்கு சொந்தமானதல்ல என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா கூறினாலும் அவரின் அரசியல் செல்வாக்கு, பலம் என்பவற்றின் ஊடாகவே இத்தொழிற்சாலைக்கான அனுமதிகள் சகல மட்டங்களிலிருந்தும் பெறப்பட்டது என்பதே உண்மையாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லைகளில் ஒன்றாக புல்லுமலை கிராமம் அமைந்துள்ளது. செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புல்லுமலையில் பூர்வீகமாக தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். 1983ல் மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்த மலையகத்தமிழ் மக்களும் இங்கு குடியமர்த்தப்பட்டனர்.

பெரிய புல்லுமலை கிராமசேவையாளர் பிரிவில் உள்ள கும்புறுவெளி என்ற இடத்திலேயே இத்தொழிற்சாலை அமைக்கப்படுகிறது.
இக்கிராமத்தில் 100ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை சிலர் ஆக்கிரமித்து அக்காணியில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் நாள் ஒன்றிற்கு இருபது ஆயிரம் லீற்றர் நீரை உறிஞ்சி போத்தல்களில் அடைத்து விற்பனை செய்யும் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புல்லுமலை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பொதுமக்கள் என பலரும் கடந்த திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்தனர்.

இத்தொழிற்சாலை தமது வாழ்வாதாரத்திற்கு பெரும் சவாலாக அமையும் என்றும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதால் தமது கிணறுகளில் உள்ள நீர் வற்றிவிடும் என அப்பிரதேச மக்கள் தெரிவித்த போது கிணறுகளில் நீர் வற்றினால் தாம் போத்தல்களில் அடைத்த நீரை தருகிறோம் என இத்தொழிற்சாலையை அமைக்கும் நபர்கள் தெரிவித்துள்ளனர். இது அந்த மக்களை முட்டாள்களாக்கும் செயலாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவித அரச நடைமுறைகளும் இல்லாமல் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தன்னிச்சையாக காணிகளை அபகரிக்கும் செயல்கள் தற்போது அதிகளவில் காணப்படுகிறது.

இதனால் எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் வீண் சந்தேகங்களும் குரோதங்களும் அதிகரித்து இனரீதியான முரன்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த அநாகரீக செயல்களை உடனே நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

இத்தொழிற்சாலை அமைக்கப்படும் பகுதியில் உள்ள 85 ஏக்கர் காணி தன்னுடையது என்றும் இப்போது அக்காணியை ஆக்கிரமித்து தொழிற்சாலைக்கான கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த தமிழர் ஒருவர் தெரிவித்தார்.
அந்த தமிழரிடம் இருக்கும் உறுதி 1985ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட காணித்திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தம்மிடம் உள்ள காணி உறுதியை அங்கு வந்த பிரதேச செயலாளரிடம் காட்டினார். தன்னுடைய காணி அபகரிக்கப்பட்டதன் பின்னணியில் அதிகாரம் மிக்க இராஜாங்க அமைச்சர் ஒருவர் இருப்பதால் இதற்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்க அச்சமாக இருப்பதாகவும் இதனால் தானும் தனது குடும்பமும் பழிவாங்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த இராஜாங்க அமைச்சர் சாதாரணமான ஒருவரல்ல. தனக்கு சார்பாக தீர்ப்பை எழுவதற்காக நீதிபதியையே மாற்றிய அதிகாரம் படைத்தவரல்லவா அவர்.

ஆனால் குடிதண்ணீர் தொழிற்சாலை அமைக்கப்படும் 25ஏக்கர் காணி ரொமென்ஷியா லங்கா பிரைவேட் லிமிட்டர்ட் என்ற தனியார் கம்பனியின் பெயருக்கு உறுதி எழுதப்பட்டிருக்கிறது. மாகா மினரல் வோட்டர் தொழிற்சாலை என அந்த தொழிற்சாலைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த குடிதண்ணீர் தொழிற்சாலையை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவே அமைப்பதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்தாலும் இத்தொழிற்சாலையின் முகாமைத்துவ பணிப்பாளராக காத்தான்குடியை சேர்ந்த மும்தாஜ் மௌளவி என்பவரின் பெயரும் பணிப்பாளராக எம். எஸ். மொஹமட் நௌஷார்த் என்பவரின் பெயரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் நெருங்கிய உறவினர்கள் என்றும் கூறப்படுகிறது.

காத்தான்குடியிலிருந்து 50 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள புல்லுமலையில் காத்தான்குடியை சேர்ந்தவர்களுக்கு எப்படி காணி வந்தது என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. புல்லுமலை நூறுவீதம் தமிழர்கள் வாழும் கிராமம்.

குடிநீர் உற்பத்தி தொழிற்சாலைக்கான எந்த அனுமதியும் உரிய முறையில் பெறப்படவில்லை, ஆளும் கட்சி அமைச்சர் என்ற அதிகாரத்தின் மூலமே இத்தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இப்பிரதேச மக்களின் கருத்துகள் எதுவும் பெறப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இத்தொழிற்சாலையில் நாளாந்தம் 20ஆயிரம் லீற்றர் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு போத்தல்களில் அடைக்கப்பட உள்ளது. எதிர்காலத்தில் நாளாந்தம் குறிக்கப்பட்ட அளவுக்கு மேலாகவும் நீர் உறிஞ்சி எடுக்கப்படலாம்.

அப்போது புல்லுமலை கிராமத்தின் நிலத்தடி நீர் மட்டுமல்ல மாவட்டம் முழவதிலும் உள்ள நிலத்தடி நீர் வற்றிப்போகலாம். குளங்கள் கிணறுகள் நீர் நிலைகள் அனைத்தும் வற்றிப்போகலாம். இதனால் விவசாயம் விலங்கு வேளாண்மை மீன்பிடி போன்ற அனைத்து தொழிற்துறைகளும் அழிக்கப்படும். விவசாய மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டம் பாலைவனமாக மாறலாம்.

இத் தொழிற்சாலை மூலம் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு நீர் பற்றாக்குறை ஏற்படும் என்றும், ஏற்கனவே புல்லுமலை பகுதியில் உள்ள மக்கள் குடிக்க நீர் இன்றி கஷ்டப்படும் நிலையில் எங்களது நீரை உறிஞ்சி விற்பதற்காக அமைக்கப்படும் இந்த தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க முடியாது என அப்பகுதியில் உள்ள விவசாய அமைப்புகள், மீனவர் சங்கங்கள், கிராம அபிவிருத்தி சங்கம் ஆகியனவற்றின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

புல்லுமலையில் ஏற்கனவே குடிநீர் பற்றாக்குறை பிரச்சினை நிலவி வருகிறது. கும்புறுவெளி என்ற கிராமத்திலேயே நீர் வளம் காணப்படுகிறது. அதனை இனங்கண்டு அந்த இடத்தில் நாளாந்தம் 20ஆயிரம் லீற்றருக்கு மேல் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி வாழும் இடமாக இது உள்ளதால் அங்குள்ள நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டால் விவசாயம் முற்றாக பாதிக்கப்படும்.

தொழிற்சாலை கழிவுகள் மற்றும் இரசாயண பதார்த்தங்களால் அந்த பகுதியில் சுற்றுசூழல் பாதிக்கப்பட்டு கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.
தற்போது அபகரிக்கப்பட்டிருக்கும் 100க்கும் மேற்பட்ட காணிகளில் விலையுயர்ந்த மரங்கள் காணப்படுகின்றன. அவை வெட்டப்பட்டு இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதாகவும் வெட்டப்படும் மரங்கள் நாளாந்தம் மகாஓயா ஊடாக தென்னிலங்கைக்கு கடத்தப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

காடுகள் அழிக்கப்பட்டு மரங்கள் கடத்தப்படும் அதேவேளை அப்பிரதேசத்தில் உள்ள ஆற்றிலிருந்து மண் அகழப்பட்டு இத்தொழிற்சாலை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் நாளாந்தம் பெருந்தொகையான மண் கடத்தப்படுவதாகவும் அப்பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த தொழிற்சாலை அமைக்கப்படும் போது அப்பிரதேச மக்களின் சம்மதத்தையும் பெற்றிருக்க வேண்டும் என்றும் இத்தொழிற்சாலை அமைக்கப்படுவது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என செங்கலடி பிரதேச செயலாளர் ந.வில்வரத்தினம் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது அங்கு வந்த செங்கலடி பிரதேசசபையின் செயலாளர் பேரின்பம் என்பவரும் செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் கதிரவேற்பிள்ளையும் இத்தொழிற்சாலை அமைக்கப்படுவது பற்றி தமக்கு தெரியாது என ஆரம்பத்தில் தெரிவித்தனர்.

இத்தொழிற்சாலையில் சம்பந்தப்பட்ட இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தனது கட்சியை சேர்ந்தவர்தான், எனினும் தான் இதற்கு அனுமதி வழங்கவில்லை என மழுப்பலான பதிலை பிரதேசசபை தவிசாளர் கதிரவேற்பிள்ளை கூறிய போது பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் பிரதேச சபை செயலாளர் பேரின்பம் என்பவர் கட்டிடத்திற்கான அனுமதியை வழங்கிய ஆதாரத்தை தொழிற்சாலையின் பணிப்பாளர்கள் அங்கு காட்டியுள்ளனர். இதன் மூலம் செங்கலடி பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோரின் இரட்டை வேடம் மக்கள் முன் அம்பலமாகியது.

செங்கலடி பிரதேச சபை ஹிஸ்புல்லாவை அமைப்பாளராக கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிர்வாகத்தில் இருப்பதால் அதனை பயன்படுத்தியே இத்தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும், பிரதேசசபை தவிசாளரும், செயலாளரும் இந்த அநியாயத்திற்கு துணை போய் இருக்கிறார்கள் என்றும் அப்பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கட்டிடங்களை கட்டுவதற்கான வரைபடங்களை செங்கலடி பிரதேச சபை செயலாளர் அங்கீகரித்து அனுமதி வழங்கியுள்ளார்.  இதனால் சுற்றுசூழலுக்கு பாதிப்பு இல்லை என மத்திய, மாகாண சுற்றாடல் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.  மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசன திணைக்களமும் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இவை அனைத்தும் ஆளும் கட்சியில் அதிகாரத்தில் உள்ளவர்களின் செல்வாக்கினாலேயே பெறப்பட்டது என்பதுதான் உண்மை.

ஆனால் பெரிய புல்லுமலையில் அமைக்கப்படுகின்ற குடிநீர் போத்தல் உற்பத்தி தொழிற்சாலை விவகாரம் சம்பந்தமாக தனக்கு எவ்வித சம்பந்தமும் கிடையாது என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருக்கிறார்.

புல்லுமலையில் குடிதண்ணீர் தொழிற்சாலை அமைக்கப்படும் காணி முஸ்லிம்களது சொந்த பூர்வீக காணி எனவும், 100 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட காணி என்றும் ஹிஸ்புல்லா தெரிவித்திருக்கிறார்.

இந்த வேலைத்திட்டம் பிரதேச சபை, பிரதேச செயலகம், சுகாதார அமைச்சு, சுற்றாடல் திணைக்களம் என சகல அரச திணைக்களங்கள், செயலகங்கள் ஊடாக அனுமதி பெறப்பட்டு சட்டரீதியாக மேற்கொள்ளப்படுவதாக அதன் உரிமையாளர்கள் ஆவணங்களை தன்னிடம் காண்பித்துள்ளனர் என்றும் இதை தெரிந்து கொண்டும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட ரீதியில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன் எந்தவித சம்பந்தமும் இல்லாத என்னையும் இதனுடன் தொடர்பு படுத்தியுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்திருக்கிறார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வளர்ச்சியடைந்து வருவதை பொறுத்துக் கொள்ளாதவர்களே தொடர்ந்தும் இவ்வாறான போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர் என ஹிஸ்புல்லா தெரிவித்திருக்கிறார்.

ஆளும் கட்சி அமைச்சு பதவி என்ற அதிகாரங்களை வைத்துக்கொண்டு சகல மட்டங்களிலும் அனுமதியை பெற முடியும் என்பது இலங்கையின் நிர்வாகத்தில் சர்வசாதாரணமான ஒன்று. அந்த அதிகார மமதையில் தான் புல்லுமலை கிராமத்தின் வளங்களை சுரண்டி அம்மக்களின் வாழ்வதாரத்திற்கு வேட்டு வைக்கப்படுகிறது. இதற்கு செங்கலடி பிரதேசசபை தவிசாளர், செயலாளர் போன்றவர்களின் சுயநலங்களே பிரதான காரணமாகவும் அமைந்துள்ளது.

செங்கலடி பிரதேசசபையை சிங்கள பேரினவாத கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிடமும் அமைச்சர் ஹிஸ்புல்லாவிடமும் கொடுத்த அம்மக்கள் அதன் பலனை இப்போது அனுபவிக்க தொடங்கி உள்ளனர்.

புல்லுமலை மட்டுமல்ல மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்கள் பல திட்டமிட்ட வகையில் சூறையாடப்பட்டு வருகிறது.
இதனை தட்டிக்கேட்டு தடுப்பவர்கள் யார்?

பதவிகளுக்காக நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு அலையும் தமிழ் தலைமைகளுக்கு இதனை தடுப்பதற்கு எங்கே நேரம் இருக்க போகிறது.

( இரா.துரைரத்தினம் )

SHARE