செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேசத்தில்சட்டவிரோத மணல் அகழ்வே நடைபெறுகிறது : வியாழேந்திரன்

87

 

செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேசத்தில் 1350 மணல் அனுமதி பத்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுகிறது என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு நேற்று(07.02.2024) நடைபெற்ற செங்கலடி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தை தலைமைதாங்கி நடத்திய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆற்று மணல் அகழ்வு
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் ஆற்று மணல் அனுமதி பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போதும் பதுளை வீதியால் ஐம்பதுக்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆற்றுமணல் ஏற்றப்பட்டு சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்படுகிறது.

ஏறாவூர் பற்றில் உள்ள 1350 ஆற்று மணல் அனுமதி பத்திரத்தை நிறுத்தி வைத்துள்ளோம். ஆனால் கரடியனாறு பொலிஸ் பிரிவில் இருந்து தினமும் ஐம்பது ஐம்பத்தைந்து லொரிகளில் சட்டவிரோதமான முறையில் ஆற்று மணல் கொண்டு செல்லப்படுகிறது.

நாங்கள் ஆற்று மணல் அனுமதி பத்திரத்தை நிறுத்தி வைத்துள்ள நிலையில் தென்னிலங்கையில் உள்ள அமைச்சர்களை வைத்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்களுக்கு ஆற்று மணல் அனுமதி பத்திரம் வழங்கப்படுகிறது.

கடந்த காலங்களில் சில மணல் கொள்ளைகாரர்கள் கொழும்பில் இருந்து ஆட்களை கொண்டு வந்து அவர்களுக்கு அனுமதி பத்திரம் கொடுத்ததன் விளைவுதான் மட்டக்களப்பு மாவட்ட மண் வளம் அழிந்ததோடு இங்குள்ள வீதிகள், விவசாய நிலங்கள், முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது“ என தெரிவித்துள்ளார்.

அத்துடன் மணல் அகழ்வு தொடர்பாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அவர்கள் அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

ஏறாவூர் பற்று பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்பட்ட மணல் அகழ்வு அனுமதி பத்திரங்கள் நிறுத்தப்பட்டுள்ள போதும் நாளாந்தம் பதுளை வீதியால் ஐம்பதுக்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆற்றுமணல் கொண்டு செல்லப்படுவதாகவும் இதற்கான அனுமதியை வனவளப் பரிபாலன சபையின் அதிகாரிகள் நேரடியாக வழங்குவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் தென்னிலங்கையில் இருந்து வரும் அரசியல் செல்வாக்கு பெற்ற சிலருக்கு மட்டக்களப்பு மணல் வளத்தை சில மணல் கொள்ளைக்காரர்கள் தாரைவார்த்து கொடுத்துள்ளதாகவும், பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின் தீர்மானங்களை மீறி அபிவிருத்தி குழு கூட்டத்தில் அனுமதி பெறாமல் வனவளப் பரிபாலன சபையின் அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஆற்று மணல் அனுமதி வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

SHARE