செஞ்சோலை வளாகப் படுகொலை 14.08.2018 நினைவு நாள்
ஆகஸ்ட் 14, 2006 – செஞ்சொலை இல்ல மாணவிகளின் 11 வது ஆண்டு படுகொலை நினைவு நாள்.
இலங்கை விமானப்படையின் திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட துல்லியமான செஞ்சோலை சிறுமிகள் பராமரிப்பு நிலையத்தின் மீதான தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டும், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் பின் அவர்களில் 2 பேர் கொல்லப்பட்டதுமாக நடைபெற்ற இனப்படுகொலையின் மூலம் ஸ்ரீலங்கா அரசின் கோர முகம் அரங்கேறிய நாள்.
பூத்து மண்ணில் மணம் பரப்பும் மாணவ செல்வங்களில் பெரும்பாலனவர் 15-18 வயதுக்கு உட்பட்ட க.பொ.த உயர்தர கல்வி கற்கும் மாணவிகள் ஆவார்கள்.
செஞ்சொலை சிறுவர் இல்லம்.தாய் தந்தையர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்காக தேசிய தலைவரின் நேரடி கண்காணிப்பில் உருவாக்கப்பட்ட இல்லம்.
பச்சிளம் பாலகர் உள்ளிட்ட குழந்தைகள் வாழும் இல்லம் என அறிந்தும் சற்றும் மனதில் ஈரமின்றி இந்த கொடிய இனவழிப்பை சிறிலங்காவின் வான்படை செய்ததோடு நின்று விடவில்லை தாம் புலிகளை கொன்றோம் என்றும் கூவி கொண்டு திரிந்தன.
சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட நடுநிலை அமைப்புக்களான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமும் இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் கொல்லப்பட்ட அனைவரும் அப்பாவி மாணவர்களே என்பதை உறுதிசெய்துள்ளன.
கொல்லப்பட்ட மாணவிகளில் பெரும்பாலனவர்கள் க.பொ.த (உ/த) வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதும் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவிகள் என்பதும் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டிரு ந்தும் மாணவர்களை படுகொலை செய்த ஏவல் படையினரை இன்றளவும் எவரும் விசாரிக்கவில்லை.
மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறிக்காக சுமார் 400 மாணவிகள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய் ஆகிய கல்விவலயத்தை சேர்ந்த 18 பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டனர்.
அவர்களுள் ஒரு பகுதியினரே படுகொலை செய்யப்பட்ட மாணவிகள் ஆவார்கள்.
இப்பயிற்சி நெறி ஆகஸ்ட் 11, 2006 இலிருந்து 20 ஆகஸ்ட், 2006 வரை நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.
இப்பயிற்சி நெறி “கிளிநொச்சி கல்விவலயத்தால்” ஒழுங்கமைக்கப்பட்டு ,”Women’s Rehabilitation and Development (CWRD)” நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டது.
இது இவ்வாறிருக்க இலங்கை அரச பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya ரம்புக்வெல்ல) ‘தாக்கப்பட்ட இடம் புலிகளின் தளம்’ என்றும், ‘அதில் சிறுவர்கள் கொல்லப்பட்டிருந்தால் அவர்கள் புலிகளால் பலாத்காரமாக சேர்க்கப்பட்ட குழந்தைப் போராளிகள்’ என்றும் அபாண்டமாக பொய்யள்ளி கூறியதோடு மேலும் அங்கு சென்று பார்வையிட்ட நடுநிலை அமைப்புகள் போர் அனுபவம் அற்றவர்கள் என்றும் சாடியுள்ளார். “Air Targets Taken Against LTTE Re-affirmed ” என கூசாமல் பொய்யுரைத்தார்.
இத்தகைய அநீதி நிலவும் நாட்டில் தமிழ் சிறார்கள் பாதுகாப்புக்கு பதில் சொல்ல ஐ. நா. சிறுவர் அமைப்பு பதில் சொல்ல மறுத்தமை மனிதத்தின் இழுக்கு.
பாடசாலைகள், சிறுவர் அமைப்பு இடங்கள் மீது குண்டுவீச்சு மற்றும் இராணுவ தாக்குதல்களை தவிர்க்க ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இதர பல நாடுகளில் தொண்டாற்றுவது போல தகுந்த நடவடிக்கைகளை எங்கள் மண்ணில் எடுக்க தவறியது பெரும் குற்றம்.
இந்த குற்றத்தின் மூலம் இலங்கை வான்படை திட்டமிட்டு, துல்லியமாக சிறுவர் இல்லம் மீது தாக்குதல் நடத்த அனுமதித்துள்ளது.
இன்றளவும் விசாரிக்கப்படாத இந்த கோர இனப்படுகொலை உள்ளிட்ட எந்த தமிழின படுகொலையும் விசாரிக்கப்படாமல் தொடர்ந்தும் எதேச்சை அதிகாரத்தோடு தமிழின அழிப்பை கையில் எடுக்க பேரினவாத சிங்கள அரசுக்கு சர்வதேச சமூகம் அனுமதி அளித்துள்ளதா என்பதே இன்று நாம் கேட்க வேண்டிய வினா?
மண்ணில் விளைந்த முத்துக்கள் மண்ணுக்குள் புதைத்தாலும் மண்ணில் அவை விதைக்கப்பட்ட விதைகள் என்பதை இவர்கள் இழப்பின் வலியில் பூத்து எழும் புரட்சி பூக்கள் நாளை உறுதி பயக்கும்.