சென்னையில் பெண் ஒருவர் பொலிசில், எனது கருவை கலைக்க ஓடிப்போன கணவனை கண்டுபிடித்து தர வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். |
சென்னை கோயம்பேட்டை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், சில மாதங்களுக்கு முன் திருவான்மியூரில் குடும்பத்துடன் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது அருகிலுள்ள கட்டிடத்தில் பணி செய்து வந்த வெங்கடேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பெற்றோருக்கு தெரியாமல் அங்குள்ள கோயிலில் மாலை மாற்றி கொண்ட அவர்கள் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதனால் அந்த பெண் கர்ப்பமான போது, அதிர்ச்சியடைந்த வெங்கடேசன், சொந்த ஊருக்கு போய் வருவதாக கூறி தலைமறைவாகியுள்ளார். தலைமறைவானதை அறிந்து அதிர்ச்சியடைந்த அந்த பெண், தன் பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். அவனை தேடி கண்டுபிடித்து தருகிறோம் என்று பெற்றோர் ஆறுதல் கூறிய போதிலும், அதை ஏற்க மறுத்த அந்த பெண், இந்த கர்ப்பத்தை, அவனுடன் இருந்ததை கெட்ட கனவாக நினைத்து கருவை கலைத்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த 60 நாள் கர்ப்பத்தை கலைக்க மருத்துவமனை சென்றபோது, கணவர் இருந்தால் தான் கருக்கலைப்பு செய்ய முடியும் என்று மருத்துவர்கள் கூறியதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே அந்த பெண், சென்னை கோயம்பேடு பொலிசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், நானும் வெங்கடேசன் என்பவரும் காதலித்தோம். திருமணம் செய்துகொண்டோம். இப்போது நான் 60 நாள் கர்ப்பமாக இருக்கிறேன். நான் கர்ப்பிணி என்றதும் என்னை விட்டுவிட்டு என் கணவர் ஓடிவிட்டார். எனவே, என்னையும், என் குழந்தை மற்றும் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத வெங்கடேசனுடன் இனி வாழ மாட்டேன். எனது கர்ப்பத்தை கலைக்க, மருத்துவமனையில் கணவரின் கையெழுத்து கேட்கின்றனர். எனவே, அரசு மருத்துவமனையில் தரும் படிவத்தில் கணவர் என்கிற முறையில் கையெழுத்திடவும், என் கருவை கலைக்கவும் அவர் தேவை. விரைவில் அவரை கண்டுபிடித்து தாருங்கள் என கூறியுள்ளார். தற்போது கோயம்பேடு பொலிசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை தீவிரமாக தேடி வருகின்றனர். |