செயற்கை நுண்ணறிவில் மனித உரிமை

566
செயற்கை நுண்ணறிவில் மனித உரிமை!
.
செயற்கை நுண்ணறிவு நிரல்களில் மனிதர் களை இன ரீதியில் வேறு படுத்திப் பார்க்கும் தன்மை வந்து விடாமல் தடுக்க வேண்டும் என, மனித உரிமையின் மீது அக்கறையுள்ள பல அமைப்புகள் ‘டொரன்டோ பிரகடனம்’ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இப்போதே செயற்கை நுண்ணறிவு நிரல்களை பயன்படுத்தி, அரசுகளும், தனியார் பெரு நிறுவனங்களும் பல முடிவுகளை எடுக்க ஆரம்பித்துள்ளன. எனவே தான் இந்த முன்னெச்சரிக்கை என, அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
செயற்கை நுண்ணறிவு செயல்படுவது முழுவதும் மென்பொருள்கள் வடிவில்தான். ஆனால், அந்த மென்பொருள் நிரல்களை எழுதுவோர் மனிதர்களே.

அவர்கள் மனதில் இருக்கும் இனம் சார்ந்த, பாலினம் சார்ந்த வேறுபாடுகள் செயற்கை நுண்ணறிவு நிரல்களில் எட்டிப் பார்த்து விடுகின்றன. எனவே, அந்த நிரல்கள் மக்கள் தொகை போன்ற புள்ளி விபரங்களை வைத்து எடுக்கும் முடிவுகளிலும், ஒருவித சார்பு நிலை வந்துவிடுகிறது.

கடந்த சில ஆண்டுகளிலேயே, வெள்ளை இன, ஆண்களுக்கு சாதகமான சில முடிவுகளை, செயற்கை நுண்ணறிவு நிரல்கள் எடுத்திருப்பதை, ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

காரணம், அந்த நிரல்களை இயற்றியவர்களில் பெரும்பாலானோர், வெள்ளை இன ஆண்கள் என்பதுதான். எனவே, செயற்கை நுண்ணறிவு நிரல்களை இயற்றும் குழுவில் சமத்துவ ரீதியில் வேலை வாய்ப்பு அளிக்கவும், நிரல்களில் எட்டிப்பார்க்கும் சாய்வுகளை தணிக்கை செய்யவும் சிறப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என டொரன்டோ பிரகடனம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆம்னஸ்டி இன்டர்நேஷனல், ஆக்சஸ் நவ், விக்கிமீடியா பவுண்டேசன், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் உள்ளிட்ட பல அமைப்புகள் கூட்டாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.

Advertisement
SHARE