யாழ் மாவட்டத்தின் சில பகுதிகளில் அண்மைக்காலங்களாக இடம் பெற்று வருகின்ற அசம்பாவிதங்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களின் இயல்பு நிலை பாதிக்காத வகையில் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த சம்பவம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை இன்று அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த சில தினங்களாக யாழ் மாவட்டத்தின் சில பகுதிகளில் இடம் பெற்று வருகின்ற குற்றச்செயல்கள் காரணமாக மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
குறித்த சம்பவங்கள் எனக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இடம் பெறுகின்ற சம்பவங்கள் குறித்து பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குற்றச்செயல்கள் அதிகளவில் இரவு நேரங்களில் அப்பாவி பொது மக்களை இலக்கு வைத்து சமூகத்தை சீர்குலைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் குறித்த சம்பவங்கள் குறித்து மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் இச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு பொலிஸார் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.