கம்பஹா, கொட்டதெனியாவ பகுதியில் ஐந்து வயது சிறுமி சேயா சதவ்மியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி கொலை செய்தமை தொடர்பான வழக்கு இன்று முதல் நாள்தோறும் விசாரணைக்கு எழுத்துக்கொள்ளப்படவுள்ளதாக நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஷம்பா ஜானகி ராஜரத்ன அறிவித்துள்ளார்.
ட்ரையல் அட் பார் முறையில் நடைபெற்று வரும் இந்த வழக்கு, விசேட வழக்காக கருதப்படுவதாக, கடந்த மாதம் நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்று திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிமன்றம் இவ்வாறு அறிவித்துள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி காணாமல் போன சேயா சதவ்மி இரண்டு நாட்களின் பின்னர் வீட்டிற்கு அருகிலுள்ள வயற்காணியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் முதலில் பாடசாலை மாணவன் உள்ளிட்ட இருவரும், பின்னர் கொண்டையா என அழைக்கப்படும் துனேஷ் பிரியஷாந்த ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களின் டி.என்.ஏ. மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்நிலையில் சேயாவின் உடலிருந்து பெறப்பட்ட மரபணு குறித்த சந்தேக நபர்களின் இரத்த மாதிரியுடன் ஒத்துப்போகாமையை தொடர்ந்து இவர்கள் மூவரும் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து சேயாவின் கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான கொண்டையாவின் சகோதரன் சமன் ஜயலத் கடந்த ஒக்டோபர் மாதம் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.