காலேயில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இலங்கைக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்தது.
இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 342 ரன்களும், இலங்கை 203 ரன்களும் எடுத்தன. 139 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 322 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 462 ரன்கள் இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 3–வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 15 ரன் எடுத்திருந்தது.
England secured their first overseas victory in over two years when they beat Sri Lanka in Galle.
REPORT ?https://t.co/XN41djkWUU pic.twitter.com/YIkwGX0Tnt
— ICC (@ICC) November 9, 2018
இந்த நிலையில் 4–வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. 8 பேட்ஸ்மேன்கள் இரட்டை இலக்கத்தை தொட்டாலும் யாரும் பெரிய ஸ்கோரை எட்டவில்லை. அதிகபட்சமாக மேத்யூஸ் 53 ரன்களும், குசல் மென்டிஸ் 45 ரன்களும் எடுத்தனர்.
முடிவில் இலங்கை அணி 85.1 ஓவர்களில் 250 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
காலே மைதானத்தில் இங்கிலாந்து பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு இங்கு ஆடிய 4 டெஸ்டுகளில் 2–ல் தோல்வியும், 2–ல் ‘டிரா’வும் கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.