தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக மீண்டும் தன்னை அடையாளம் காட்டியுள்ளார் ஜெயலலிதா.
துணிச்சலுடன் இவர் வகுத்த வியூகங்கள் வெற்றி பெற, முதல்வர் பதவியை தக்க வைத்து சரித்திர சாதனை படைத்துள்ளார்.
மைசூரில் 1948 பெப். 24ல் ஜெயலலிதா பிறந்தார். தனது இரண்டு வயதில் தந்தையை இழந்தார். பெங்களூரில் உள்ள ‘பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் கல்வி பயின்றார். 4 வயதில் இருந்து பரத நாட்டியம், கர்நாடக இசை பயின்றார். மோகினி ஆட்டம், கதக், மணிபுரி ஆகிய மரபு வழி நாட்டியங்களிலும் நன்கு தேர்ச்சி பெற்றார்.
சினிமாவில் அவரது அம்மாவுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததால், சென்னை வந்தார். இங்குள்ள ‘சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கொன்வென்ட்டில்’ மெட்ரிக்குலேஷன் படிப்பை நிறைவு செய்தார். பள்ளி இறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றும், குடும்ப சூழலால் சினிமாத் துறையில் 15 வயதில் நுழைய நேரிட்டது.
தமிழ், கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட ஏழு மொழிகளில் சரளமாக பேசுவார். 1961ல் ஷங்கர்.வி.கிரி இயக்கிய ‘எபிஸில்’ என்ற ஆங்கில படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். 1965ல் ஸ்ரீதர் இயக்கிய ‘வெண்ணிற ஆடை’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
அதே ஆண்டு தெலுங்கு சினிமாவிலும் கால் பதித்தார். 1968ல், தர்மேந்திரா நடித்த “இஜத்” என்ற இந்தி படத்தில் நடித்தார்.1972ல் சிவாஜியுடன் இவர் நடித்து வெளியான ‘பட்டிக்காடா பட்டணமா’ என்ற திரைப்படம் தேசிய விருதை தட்டிச் சென்றது.
எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா சேர்ந்து நடித்த படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இவர்களது ஜோடியில் உருவான ஆயிரத்தில் ஒருவன், காவல்காரன், அடிமைப்பெண் உள்ளிட்ட படங்கள் ‘ஹிட்’ ஆகின..
பாடிய பாடல்கள்:
நடிப்பில் மட்டுமல்லாமல் பாடல் பாடுவதில் வல்லவராக இருந்தார். திரைப்படங்களில் 10 பாடல்களைப் பாடியுள்ளார்.
நம்பர்-1′ நடிகை:
சினிமா உலகில் காலடி வைக்கத் தொடங்கியதும்வெற்றி மீது வெற்றி வரத் தொடங்கியது. சில ஆண்டுகளில் அப்போதைய முன்னணி நடிகை சரோஜாதேவியை பின்னுக்குத் தள்ளி விட்டு, ‘நம்பர்-1’ இடத்துக்கு முன்னேறினார். தவிர, அப்போதைய நிலையில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை இவர் தான்.
அரசியல் ஆரம்பம்:
1982ல் அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். வழிகாட்டுதல்படி அ.தி.மு.க.,வில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார். 1983ல் கொள்கை பரப்புச் செயலரானார். 1984ல் முதன்முறையாக ராஜ்யசபா எம்.பி., ஆனார்.
எதிர்க்கட்சி தலைவர்:
1987ல் எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின்,அ.தி.மு.க., ஜெ., மற்றும் ஜானகி அணி என இரண்டாக பிளவுபட்டது. இதன் விளைவாக தேர்தல் கமிஷனால் ‘இரட்டை இலை’ சின்னம் முடக்கப்பட்டது.
போடி தொகுதியில் வெற்றி பெற்ற ஜெயலலிதா முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரானார்.
1989 பெப்ரவரியில், அ.தி.மு.க., மீண்டும் ஒன்றிணைந்தது. ஜெயலலிதா பொதுச்செயலரானார். ‘இரட்டை இலை’ சின்னம் மீட்கப்பட்டது.
முதல்வராக ஜெ., பதவியேற்பு:
முதன்முறை முதல்வர் 1991ல் நடந்த சட்டசபை அ.தி.மு.க, வெற்றி பெற, முதன்முறையாக தமிழகத்தின் முதல்வரானார் ஜெயலலிதா.
தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தின் முதல் பெண் முதல்வர், இளம் முதல்வர் என்ற பெருமையை பெற்றார்.
அதே ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும் அ.தி.மு.க., கூட்டணியை தமிழகம்மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்து சாதனை படைத்தார்.
1996 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தோல்வி அடைந்தது.2001ல் நடந்த சட்டசபை தேர்தலில்அ.தி.மு.க., மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. ஜெயலலிதா 2வது முறையாக முதல்வரானார்.
2006 தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி 68 இடங்களை மட்டும் பெற, எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றார்.
பின் 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற, மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றார்.
தடைகளை மீறி…:
பல்வேறு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கு சிக்கலாக அமைந்தது.
2014 செப். 27ல் கர்நாடக சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து முதல்வர் பதவியை இழந்தார்.
22 நாட்களுக்குப் பின் பிணையில் வெளிவந்தார்.2015 மே 11ல் கர்நாடக உயர் நீதிமன்றம் இவரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து மே 23ல் மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.
தற்போதைய சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற, எம்.ஜி.ஆருக்குப் பின் முதல்வர் பதவியை தக்க வைத்த முதல்வர் என்ற பெருமை பெற்றார்.
கௌரவ டாக்டர் பட்டம்:
1991: சென்னை பல்கலை.
1992 : எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலை
1993: மதுரை காமராஜர் பல்கலை
2003: தமிழ்நாடு வேளாண்மை பல்கலை
2003: திருச்சி பாரதிதாசன் பல்கலை
‘பட்டிக்காடா பட்டணமா’ மற்றும் ‘சூரியகாந்தி’ ஆகிய படங்களுக்காக சிறந்த தமிழ் நடிகைக்கான ‘பிலிம்பேர் விருது.
1972ல் தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது
சென்ற நாடுகள்:
அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பான், நேபாளம்