ஜனநாயக விரோதப்போக்குகள் வேண்டாம் பொலிஸார் விதிமுறைகளுக்கு அமைய செயற்படவேண்டும் : சிவசக்தி ஆனந்தன் எம்.பி

357

 

பொலிஸார் ஜனநாயக விரோதப்போக்குகளை கடைப்பிடிக்காது  சட்டவிதிமுறைகளுக்கு அமைவாக செயற்படவேண்டும் என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
unnamed
தமிழர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு ஜனநாயக விரோதப்போக்குகளை மேற்கொண்டமையாலேயே கடந்த கால அரசாங்கங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமையன்று  சூசையப்பர் தேவாலய வீதி வேப்பங்குளத்தில் பொதுமகன் ஒருவருடைய வீட்டுக்குள் அத்துமீறி பிரவேசித்த பொலிஸார் அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்ய முயற்சித்த சந்தர்ப்பம் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
கடந்த செவ்வாய்கிழமையன்று(07.04.2015) அதிகாலை 3.00 மணியளவில் சூசையப்பர் தேவாலய வீதி வேப்பங்குளத்தில் அமைந்துள்ள பொதுமகன் ஒருவருடைய  வீட்டுக்குச்சென்ற எட்டு நபர்கள் அவருடை வீட்டை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மதிலால் ஏறி குதித்து உள்நுழைந்துள்ளார்கள். அவர்களில் இருவர் பொலிஸ் உடையில் இருந்துள்ளனர். ஏனையவர்கள் சப்பாத்து அணிந்தவாறு சிவில் உடையில் காணப்பட்டுள்ளனர்.
வீட்டின் பிரதான கதவை திறக்க முயன்றுள்ளனர். சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் கதவை திறந்தபோது குறித்த நபரொருவரின் பெயரை குறிப்பிட்டு அவர்  இருக்கிறாரா? என்று கடும்தொனியில் அச்சுறுத்தும் வகையில் கேள்வியெழுப்பியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து குறித்த நபர் வெளிவந்தபோது  கைவிலங்கிட்டு இழுத்துச்சென்றுள்ளனர். அதேநேரம் வீட்டின் பிரதான வாயில் அருகில் நின்ற அநாமதேய நபர் ஒருவரிடம் இவரா அந்த நபர் என கேள்வியெழுப்பியபோது அவர் ஆம் என பதிலளித்துள்ளார்.பின்னர் வாகனமொன்றில் ஏற்றி கொண்டு சென்றுவிட்டனர்.
இதன்போது கைதுசெய்யப்பட்ட இளைஞனின் சகோதரி நீங்கள் யார்? ஏன் எனது சகோதரனை கைதுசெய்யிறீயள்? என்று பொலிஸாரிடம் கேள்வி கேட்டதால் அங்கு ஏற்பட்ட அமளிதுமளியில் அங்கிருந்தவர்கள் அல்லோலகல்லோலப்பட்டுள்ளனர். குறித்த சகோதரி குழந்தை பெற்று பதினொரு நாட்களே ஆகியிருந்த நிலையில் அவர்கள் பெரும் அவஸ்தைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
குறித்த சம்பவம் நடைபெற்ற மறுதினம் அவருடைய குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றபோது தாம் யாரையும் கைது செய்யவில்லை எனமறுத்துவிட்டு நண்பகலுக்குப் பின்னர் அப்பொதுமகனை பார்வையிடுதவற்கு அனுமதித்துள்ளனர். அதன்பின்னர் தாங்கள் தேடிய அந்நபர் இவர் அல்ல எனக் குறிப்பிட்டு விடுவித்துள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகள் பல கடந்த கால ஆட்சியில் தினமும் தமிழர் தாயங்களில் அரங்கேறிக்கொண்டேயிருந்தன. அடக்குமுறைகள் தொடர்ந்தன.  ஜனநாயகம் புதைக்கப்பட்டது. இதனால் அந்த ஆட்சி தோல்விகண்டது. ஆனால் தற்போது நல்லாட்சி என்ற கட்டமைப்பில் ஒன்றுபட்டு அமைந்திருக்கும் தேசிய அரசாங்கத்தின் அட்சியிலும் இவ்வாறான சம்பவம் நிகழ்வதென்பது மீண்டும் முன்னைய நிலைமையே உருப்பெற்றிருக்கின்றது என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீண்டகால இராணுவ ஆட்சிக்குள் இருந்து விடுபட்டு சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில் பொலிஸார் இப்படி காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டுள்ளனர். மேற்குலகம் மற்றும் வளர்ச்சி அடைந்த நாடுகளில் நபர் ஒருவரை கைது செய்வதற்கு அங்குள்ள பொலிஸார் ஒழுக்கத்துடனும் பண்பாடுகளுடனும் செயற்படுவர். அவர்களை பின்பற்றி இலங்கை பொலிஸ்துறையும் நற்பண்புகளையும் நடத்தைகளையும் வெளிப்படுத்தினால் மாத்திரமே பொதுமக்களுக்கும் பொலிஸ்ஸாருக்கும் இடையில் நல்ல சுமுகமான உறவு ஏற்படும்.
குறிப்பாக மேற்குறிப்பிட்ட சம்பவத்தால் குறித்த குடும்பத்தார்களும் அவர்களும் உறவினர்கள் அயலவர்கள் என அக்கிராமமே அமையற்று வழமைக்கு மாறாக பதற்றத்துடன் காணப்பட்டது.  ஆட்சி மாற்றத்தின் பின்னர் பாதுகாப்பு, நல்லிணக்கம் தொடர்பில் நம்பிக்கை கொண்டிருந்த மக்களுக்கு இத்தகைய சம்பவங்கள் புதிய அரசாங்கத்திற்கு  மோசமான விளைவுகளையே தரும்.  ஆகவே அமைதியை நிலைநாட்ட வேண்டிய பொலிஸார்  ஏதேச்சையாக அதிகாரத்தை கையிலெடுத்து மக்களுக்கு குந்தகம் விளைவிக்காது விதிமுறைகளுக்கு அமைவாக செயற்படவேண்டும் என்றும் ஆனந்தன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
SHARE