மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் 12 வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும், அதனூடாக பல நன்மைகள் நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது வெளிநாட்டு பயணம் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை பதிவானதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது முதலாவது பயணமாக இந்தியாவிற்கு சென்ற ஜனாதிபதி, இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில், பொருளாதாரம், மின்சக்தி, கலாசார தொடர்புகளுக்கான உடன்படிக்கையிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தவிர, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், தாய்லாந்து, மொல்டா, பிரான்ஸ், வத்திகான், ஜேர்மனி மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகளுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்ததை அவர் இதன்போது நினைவூட்டினார்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மன் விஜயத்தின் போது இலங்கை மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், தொழில்நுட்ப ஒத்துழைப்புகளுக்காக ஜேர்மன் இலங்கைக்கு 18 மில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒரு வருட கால ஆட்சியில் சர்வதேச நாடுகளுடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளதாகவும், சர்வதேச உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன இலங்கைக்கு கடன் உதவிகளை வழங்கவுள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.