ஜனாதிபதி எழுப்பியுள்ள யதார்த்தமான கேள்வி

303

கருணா அம்மான், பிள்ளையான் போன்றவர்களை கடந்த அரசாங்கம் விடுவித்து அவர்களுக்கு பதவிகளை கொடுக்க முடியுமாயின் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தனது அரசாங்கம் பிணை வழங்குவதில் என்ன தவறு? என்று ஜனாதிபதி நியாயமான கேள்வியொன்றை எழுப்பியிருக்கிறார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகள் நாட்டில் பாரிய அவதானத்தை பெற்றுள்ள நிலையில் அந்த விவகாரம் தொடர்பாக யதார்த்தகரமான கருத்தொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருக்கிறார்.

அதாவது கருணா அம்மானை சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராகவும் பிள்ளையானை கிழக்கு மாகாண முதலமைச்சராகவும் நியமித்து கே.பி.யை பாதுகாத்து போர்க்களத்தில் நின்றிருந்த 12,000 புலி உறுப்பினர்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுதலை செய்தது சரியென்றால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் இருந்தவர்களை நான் பிணையில் விடுவித்தது தவறா? என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன் யுத்தம் நிறைவடைந்த ஆறு வருடங்கள் கடந்துள்ள போதிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மக்களின் மனங்களை வெல்வதையும் அவர்களது நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதையும் முன்னைய அரசாங்கம் தவறவிட்டு விட்டது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வடக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்துவதை தடுப்பதற்கும் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றுவிக்கப்படாதிருப்பதற்குமான செயற்றிட்டங்களை முன்னெடுத்து தேசிய நல்லிணக்கத்தை எமது அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

முன்னைய அரசாங்கம் செய்யத் தவறிய விடயங்களின் பின்னணியில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு எமது அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் என்றெல்லாம் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அங்குள்ள மக்களிடமிருந்த இராணுவத்தின் மீதான வெறுப்பு விடுபட்டிருக்கவில்லை. பாதிக்கப்பட்ட அந்த மக்களிடத்தில் மகிழ்ச்சி இருக்கவில்லை எனவும் ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

அத்துடன் 2015ம் ஆண்டு வரையில் வடக்கு, கிழக்கு மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறான நிலையில் தான் எமது புதிய அரசாங்கம் அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

அவ்வாறான நம்பிக்கையின் பேரில்தான் வடக்கு, கிழக்கு, தெற்கு என அனைத்துப் பகுதி மக்களும் இணைந்து கடந்த தேர்தலில் வாக்களித்திருந்தனர். இதன் பிரகாரமே தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாம் செயற்பட்டோம்.

அதற்காகவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவை தலைமையாகக் கொண்ட தேசிய நல்லிணக்க செயற்குழுவும் ஸ்தாபிக்கப்பட்டது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார்.

2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் கடந்த ஆறு வருடங்களாக வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் எதுவும் ஆக்கபூர்வமான முறையில் தீர்க்கப்படாத சூழலில் அந்த மக்கள் விரக்தியின் விளிம்பிற்கே சென்றிருந்த நிலையிலேயே நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுடன் புதிய அரசாங்கமும் பதவிக்கு வந்தது.

இவ்வாறான சூழலிலேயே வடக்கு, கிழக்கு மக்களின் உண்மையான நிலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் முக்கிய உரையை நிகழ்த்தியிருக்கிறார். விசேடமாக யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்ட பாரிய பிரச்சினகள் எதுவும் தீர்க்கப்படவில்லை.

தீர்க்கப்படுவதை விடுத்து அவற்றுக்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் கூட எடுக்கப்படவில்லை. நீண்டகாலமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவும் அல்லது இனங்களுக்கிடையில் தேசிய ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதுமட்டுமன்றி காணாமல் போனோரின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாததுடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களை ஆற்றுவதற்கும் ஆரோக்கியமான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை.

அதுமட்டுமன்றி, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உரிய முறையில் பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லையென்றும் மக்களின் வாழ்வாதார தேவைகள் நிறைவேற்றப்படவில்லை என்ற பாரிய குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன.

அத்துடன் 10 முதல் 20 வருடங்களாக எவ்விதமான விசாரணைகளும் நீதிமன்ற நடவடிக்கைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திலும் கடந்த காலத்தில் எந்தவித மான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் புரையோடிப்போய் காணப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை எட்டுவதற்கு சந்தர்ப்பம் காணப்பட்டபோதிலும் கூட அவற்றை கடந்த அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இதனால் இலங்கையானது சர்வதேச ரீதியிலும் பல்வேறு அழுத்தங்களுக்கு உட்பட்டது. விசேடமாக பயங்கரவாத தடுப்புச் சட்டம் அவசரகால சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் அல்லது உரிய நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்துமாறும் கடந்த காலத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்தில் பாரிய அளவில் வலியுறுத்தப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் பயங்கரவாத தடை சட்டத்தை அகற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும் அவ்வாறான மக்களின் காயங்களை ஆற்றக்கூடிய வகையிலான எந்த செயற்பாடும் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்படவில்லை. இந்த நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் புரையோடிப் போய் கிடக்கின்ற நீண்டகால பிரச்சினைக்கு தீர்வைக் காணும் என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரத்திற்கு விரைவில் அரசாங்கம் தீர்வு காண வேண்டுமென நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மிகத் தீவிரமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் புதிய அரசாங்கமானது கடந்த அரசாங்கத்தைப் போலன்றி தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் சில நடவடிக்கைகளை எடுத்திருந்தது. விசேடமாக ஒரு தொகையினருக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுத்ததுடன் மேலும் குறிப்பிட்ட ஒரு தொகையினருக்கு புனர்வாழ்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அரசாங்கம் அறிவித்தது.

இது தொடர்பில் இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதோ இல்லையோ இந்த முயற்சிக்கு பாரிய எதிர்ப்புக்கள் நாட்டில் கடும்போக்குவாதிகளிடமிருந்து எழுந்தன. விசேடமாக புலி உறுப்பினர்களை அரசாங்கம் விடுவிக்கப்போவதாகவும் இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் என்றும் இனவாத சக்திகள் குரல் எழுப்ப ஆரம்பித்தன.

கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளினால் புலிகள் மீண்டும் தலைதூக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வாறு சில இனவாத கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில யதார்த்தமான கேள்விகளை பாராளுமன்றத்தில் எழுப்பியிருக்கிறார்.

அதாவது கருணா அம்மான், பிள்ளையான் போன்றவர்களை கடந்த அரசாங்கம் விடுவித்து அவர்களுக்கு பதவிகளை கொடுக்க முடியுமாயின் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தனது அரசாங்கம் பிணை வழங்குவதில் என்ன தவறு? என்று ஜனாதிபதி நியாயமான கேள்வியொன்றை எழுப்பியிருக்கிறார்.

அதாவது கடந்த அரசாங்கம் இந்த விடயத்தில் மேற்கொண்ட முயற்சியை தான் விமர்சிக்கவில்லையென்றும் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி தமிழ் கைதிகளுக்கு பிணை வழங்க தமது அரசாங்கம் எடுத்த முடிவு சரியானது எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இவ்வாறு பரந்த மனப்பான்மையுடனும், நல்லிணக்கத்தை நோக்கமாகக் கொண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றியுள்ளமை தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரை நம்பிக்கையூட்டும் நகர்வாக அமைந்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் அதற்கு ஏற்றவகையில் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அதற்கு அனைத்துத் தரப்பினரும் தமது ஆக்கபூர்வமான ஆதரவை வழங்குவார்கள் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

எனவே அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் போனோர் விடயம் உள்ளிட்ட தமிழ்பேசும் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கு விரும்புகிறோம்.

SHARE