ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான ‘வெலி ராஜு’ என பரவலாக அறியப்படும் பிரியந்த சிறிசேன மீது சரமாரியான கோடரி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் நேற்று இரவு 7.00 மணியளவில் பொலன்னறுவை, புதிய நகர பிரதேசத்தின் ஹத்தரே எல பகுதியில் உள்ள வாகனம் திருத்தும் இடமொன்றின் அருகே வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரியந்த சிறிசேனவின் நண்பரான 34 வயதுடைய ஹப்புதந்திரிகே துஷான் லக்மால் என்பவரால் இந்த
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தாக்குதலில் பிரியந்த சிரிசேனவின் தலையின் பின் பகுதி கடுங் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கேசரியிடம் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் தாக்குதலையடுத்து பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற குறித்த சந்தேக நபர் பின்னர் இரவு 9.00 மணியாகும் போது பகமூன பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் சமப்வம் குறித்து பொலன்னறுவை உதவி பொலிஸ் அத்தியட்சரின் கீழ் மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர மேலும் குறிப்பிட்டார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நேற்று இரவு 7.00 மணியளவில் ஜனாதிபதியின் சகோதரரான வெலி ராஜு எனப்படும் பிரியந்த சிறிசேன பொலன்னறுவை புதிய நகரப் பகுதியின் ஹத்தரே எல எனும் இடத்தில் வாகன திருத்தும் இடம் ஒன்றின் அருகே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அவரது நண்பரான லக்மால் என்பவர் இந்த தாக்குதலை நடத்தியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலையடுத்து உடனடியாக பொலன்னறுவை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள பிரியந்த சிறிசேன அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே ஸ்தலம் விரைந்த விஷேட பொலிஸ் குழுவினர் சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தை குற்றப் பிரதேசமாக பிரகடனம் செய்து விசாரணைகளை ஆரம்பித்தனர். பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் பிரியந்த சிறிசேனவின் நண்பரான லக்மால் தாக்குதலை மேற்கொள்ளும் போது அருகே லக்மாலின் இரு உறவினர்கள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளதுடன் லக்மால் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதையும் உறுதிப்படுத்தினர். அத்துடன் லக்மாலும் பிரியந்த சிறிசேனவும் நண்பர்கள் என்பதையும் வெளிப்படுத்திக் கொண்ட பொலிஸார் லக்மாலின் வீட்டுக்கு அருகிலேயே தாக்குதல் இடம்பெற்றுள்ளதையும் உறுதிப்படுத்திக்கொண்டனர்.
இதனையடுத்து இந்த தாக்குதலுக்கான காரணத்தை பொலிஸார் தேடினர். அதில் நண்பர்கள் இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரம் ஒன்று இந்த தாக்குதலுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதை பொலிஸார் வெளிப்படுத்திக் கொன்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கேசரிக்கு குறிப்பிட்டார்.
இந் நிலையில் நேற்று இரவு 9.00 மணியாகும் போது பொலன்னருவை மாவட்டத்தின் பக்கமூன பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ள லக்மால் தானே பிரியந்த சிறிசேனவை தாக்கி படுகாயம் ஏற்படுத்தியதாக கூரி சரணடந்துள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்த பொலிஸார் அவரிடம் விஷேட விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந் நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலியில் அனுமதிக்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரர் பிரியந்த சிறிசேனவின் மோசமாக காணப்படவே நேற்று இரவோடிரவாக பொலன்னறுவையில் இருந்து விஷேட ஹெலிகொப்டர் ஊடாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பாட்டார்.
இந் நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பிரியந்த சிறிசேனவுக்கான சிகிச்சைகள் நேற்று இரவு ஆரம்பிக்கப்பட்டன.
இந் நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் பொலன்னறுவை உதவி பொலிஸ் அத்தியட்சரின் கீழான விஷேட பொலிஸ் குழு விஷேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது
Read more: http://www.vivasaayi.com/2015/03/maithiri-brother.html#ixzz3VetzrZOE