ஜனாதிபதி தேர்தலில் குமார் சங்கக்காரவை கொண்டு வர வேண்டும் என்று சிலர் கோசம்

107

(Dilan Maha)

இன்றைய அரசியலில் இந்நாட்டில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்காரவை கொண்டு வர வேண்டும் என்று சிலர் கோசம் வழங்குகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

கோறளைப்பற்று இளைஞர் சேவை சம்மேளனத்தினால் இளைஞர் சமூகப் பொறுப்பாளராகும் இளைஞர் தலைமைத்துவ பயிற்சி முகாமின் இறுதி நாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை வாழைச்சேனை இந்துக்கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றமானது சர்வ சக்தியுள்ள இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இளைஞர் விவகார அமைச்சராகவும், பிரதமராகவும் இருக்கின்ற ரணில் விக்கரமசிங்க முன்பு இளைஞர் விவகார அமைச்சராக இருந்த காலத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகமாக இருந்த தற்போதைய அவரது ஆலோசகர் சரித்த ரத்வத்த ஆகியோர் காலத்தில் தேசிய இளைஞர் சேவை மன்றம் மிகவும் சிறப்பாக இயங்கியுள்ளது.

இளைஞர் சமுதாயத்தை பொறுத்த வரையில் இளைஞர்கள் இந்நாட்டின் முதுகெலும்பாக விளங்குகின்றனர். பொதுவாக இளைஞர் நெருப்பு குச்சிகள் போன்றவர்கள் என்று வர்ணிக்கப்படுவார்கள். காரணம் நெருப்பு குச்சியை நல்ல விடயத்திற்கும் பயன்படுத்தலாம், தீய செயலுக்கும் பயன்படுத்தலாம்.

ஆனால் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இளைஞர்களை நல்ல செயலில் பயன்படுத்தும் முகமாக அவர்களிடத்தில் காணப்படும் திறன்களை வெளிக் கொணரச் செய்து அதை தேசிய மட்டம், சர்வதேச மட்டம் வரை எடுத்துச் சென்று சமூகத்தில் உயர்ந்த நிலையை பெற்றுக் கொடுக்க செய்வதுடன், இளைஞர்கள் மத்தியில் விளங்குகின்ற வேலையில்லை என்ற உள பிரச்சனையை தீர்ப்பதில் அவர்களுக்கு உதவும் ஒரு அமைப்பாக விளங்குகின்றது.

குறிப்பாக இன்றைய அரசியலில் இந்நாட்டில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒரு கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்காரவை கொண்டு வர வேண்டும் என்று சிலர் கோசம் வழங்குகின்றனர். இது எதனால் நடைபெறுகின்றது. அவர் தன்னிடையே இருந்த கிரிக்கெட் சார்ந்த விளையாட்டு திறனை வெளிப்படுத்தி சர்வதேசம் வரை சென்று இலங்கைக்கு புகழை சேர்ந்து கொடுத்ததனாலும் இலங்கை மக்களால் கிரிக்கெட் பிரதிநிதியாக நேசிக்கப்பட்டதாலும் இவரால் தேர்தலில் கூடிய வாக்குகளை பெற முடியும் என்ற நிலையில் இந்த வீரர் ஜனாதிபதி வேட்பாளராக வர வேண்டும் என்ற பேச்சு நடைபெறுகின்றது.

இதுபோன்று இங்குள்ள இளைஞர் யுவதிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அதன் மூலம் அவர்களும் உயர் நிலையை அடைய முடியும். இதற்கு களம் அமைத்து கொடுக்கும் ஒரு அரச சார்புடைய நிறுவனமே தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்.

இது தலைமைத்துவ பயிற்சி கருத்தரங்கு இதில் தீர்மானம் எடுத்தல் என்பது முக்கியமானது. ஒரு பிரதேச சபையில் குப்பை கொட்டுவதற்கு இடம் தெரியும் விடயத்தில் எவ்வாறு ஒரு தவிசாளர் முடிவெடுக்க வேண்டும் என்பதை இங்குள்ள இளைஞர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நான் பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு முன்னர் இளைஞர் சேவை அதிகாரியாக கடமையாற்றியவன். இவ்வாறான இளைஞர் தலைமைத்துவ பயிற்சிகளை நான் திறம்பட மேற்கொண்டுள்ளேன். அத்தோடு வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கும் இளைஞர் கழகங்களுக்கு இவ்வருடத்தினுள் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளது என்றார்.

கோறளைப்பற்று இளைஞர் சேவை சம்மேள தலைவர் அ.வினோத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.திபாஸ், மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற நிஸ்கோ முகாமையாளர் எஸ்.கிருபாகரன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் கி.தேவகானந், கோறளைப்பற்று இளைஞர் சேவை அதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வெள்ளிக்கிழமை ஆரம்பமான இளைஞர் சமூகப் பொறுப்பாளராகும் இளைஞர் தலைமைத்துவ பயிற்சி முகாம் மூன்று நாட்கள் இடம்பெற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சான்றிதழ் வழங்குடன் நிறைவு பெற்றது.

இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதுடன், கோறளைப்பற்று இளைஞர் சேவை சம்மேளனத்தின் பிரதி நிதிகளுக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

SHARE