ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் முக்கிய சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்

363

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

இன்று மாலை 3.30 மணியளவில் அவர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் முக்கிய சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதிக்கும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மகிந்த ஆதரவு எம்.பிக்களால் நாடாளுமன்றத்தில் அமளி – சபை நாளை வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் யோசனை கொண்டு வரப்பட்டதை அடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களில் சிலர் சபைக்கு நடுவில் வந்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால், நாடாளுமன்றத்திற்குள் அமளியான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை லஞ்சம், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைத்துள்ளமை தொடர்பில் மகிந்த ராஜபக்ச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், சபைக்கு நடுவில் அமர்ந்து இன்றே தமக்கு ஒரு தீர்வு வேண்டும் என கூறி கோஷமிட்டு வருவதாக நாடாளுமன்ற செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதியை லஞ்ச ஆணைக்குழு தனது கடமைக்காக அழைத்துள்ளதாகவும் அதில் பிரச்சினைகள் இருந்தால், முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணிகளுக்கு அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அமளி முடிவுக்கு வந்தது.

இரண்டாம் இணைப்பு

நாடாளுமன்றத்தில் மகிந்த ஆதரவு எம்.பிக்களின் எதிர்ப்பும் பிரதமரின் பதிலும்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை லஞ்சம், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு விசாரணைக்கு அழைத்துள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ, வாசுதேவய நாணயக்கார, தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர்கள், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை லஞ்ச ஆணைக்குழுவுக்கு விசாரணைக்கு அழைத்ததை வன்மையாக கண்டிப்பதாகவும் அப்படி நடக்காது என்பதற்கு அரசாங்கம் நிரந்தர உத்தரவாதத்தை வழங்க வேண்டியது அவசியம் எனவும் கூறினர்.

விமல் வீரவன்ஸவும் வாசுதேவ நாணயக்காரவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கடுமையாக விமர்சித்தனர்.

பிரதமர் நயவஞ்சக வேலை செய்வதாக வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தினார்.

பிரதமரின் தேவைக்கு அமைய முன்னாள் ஜனாதிபதிக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாக பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க,

மகிந்த ராஜபக்சவை விசாரணைக்கு அழைத்துள்ளது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றார்.

லஞ்ச ஆணைக்குழுவின் பணிகளில் அரசாங்கம் தலையிடாது. அது ஆணைக்குழுவின் சுதந்திரமான தீர்மானம்.

சாட்சியம் ஒன்றை பெறவே முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் என்ன பிரச்சினை?. பிரச்சினைகள் இருந்தால், ராஜபக்ச அவர்களின் சட்டத்தரணிகள் உரிய நடவடிக்கையை எடுக்க முடியும் என பிரதமர் குறிப்பிட்டார்.

மகிந்த ராஜபக்சவை லஞ்ச ஆணைக்குழுக்கு கொண்டு செல்லக் கூடாது என கோஷமிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு நடுவில் அமர்ந்து கொண்டனர்.

விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார, சஜின் வாஸ் குணவர்தன, மகிந்தானந்த அளுத்கமகே, தினேஷ் குணவர்தன, நாமல் ராஜபக்ச, உதித்த லொக்குபண்டார, பந்துல குணவர்தன உட்பட சுமார் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு நடுவில் அமர்ந்து எதிர்ப்பை வெளியிட்டனர்.

கூட்டத்தை ஒத்திவைத்து, சபாநாயகர் செங்கோலை அப்புறப்படுத்திய பின்னரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு நடுவில் அமர்ந்திருந்தனர்.

SHARE