ஜனாதிபதி – ரணில் அம்பாறை விஜயத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

230

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை அக்கரைப்பற்று பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாகவும் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் நாளை (19) சனிக்கிழமை வருகைத்தர உள்ளதாகவும், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) அமைக்கப்பட்டுள்ள நீச்சல் தடாகம் மற்றும் விஞ்ஞான ஆய்வு கூடம் என்பவற்றை திறந்துவைத்து, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாநாட்டு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளதாக அறியப்படுகின்றது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு உயர் அதிகாரிகள், அம்பாறை மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் திணைக்கள உயர் அதிகாரிகள் குழுவினருடன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எல்.எம்.முஹம்மட் நஸீரின் தலைமையில் 17ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் பாதுகாப்பான முறையில் மேடை மற்றும் நுழைவாயில் அமைத்தல், மைதானத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் ஜனாதிபதியின் வருகை தொடர்பாக அக்கரைப்பற்று குடியிருப்பு ஒலுவில் துறைமுகம் மற்றும் பாலமுனை போன்ற மைதானங்களை பார்வையிட்டனர்.

இதேவேளை மாநாடு நடைபெறும் இடத்திற்கு இந்தக் குழுவினர் விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளையும் அறிந்து, பொதுமக்களின் வசதிகருதி அமைக்கப்படவுள்ள கூடாரங்களை ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு ஏற்ப அமைக்கப்பட வேண்டும் என்ற முன்னறிவித்தல்களை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினருக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE