ஐக்கிய நாடுகள் மனித உரி மைப் பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை தொடர்பான உப நிகழ்வுகள் தொடர்பில் அனைவரும் அவதானம் செலுத்தியுள்ளனர். ஜெனிவா வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த இலங்கை குறித்த உப குழுக் கூட்டங்களில் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் பரபரப்பான வாதப்பிரதிவாதங்கள் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் இலங்கை தொடர்பான இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன. மேலும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பிரதிநிதிகள் இலங்கை தூதரகத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர். அத்துடன் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களும் இந்த உப குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளனர்.
பிரான்ஸ் அமைப்பு நடத்தும் கூட்டம்
இலங்கை தொடர்பான முதலாவது உபகுழுக் கூட்டமானது பிரான்ஸ் நாட்டின் அமைப்பு ஒன்றினால் நாளை 13 ஆம் திகதி மனித உரிமைப் பேரவை வளாகத்தின் 22 ஆவது அறையில் பிற்பகல் 2 மணியிலிருந்து 3.30 வரை நடைபெறவுள்ளது.
தமிழ் உலகத்தின் கூட்டம்
இலங்கை தொடர்பான இரண்டாவது உபகுழுக் கூட்டம் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது. தமிழ் உலகம் என்ற சர்வதேச அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த உபகுழுக் கூட்டம் மனித உரிமைப் பேரவையின் 11ஆவது அறையில் 14 ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
மூன்றாவது உபகுழுக் கூட்டம்
எதிர்வரும் 15ஆம் திகதி மாலை 4.30 க்கு இலங்கை தொடர்பான மூன்றாவது உபகுழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. பாரதி நிலைய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உபகுழுக் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பில் ஆராயப்படவுள்ளது. இது ஜெனிவா மனித உரிமைப் பேரவை வளாகத்தின் 23 ஆவது அறையில் நடைபெறவுள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பாக ஜெனிவா மனித உரிமைப் பேரவை வளாகத்தில் 11 ஆவது இலக்க அறையில் மற்றுமாரு உப குழுக் கூட்டம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது. மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த கூட்டத்தை லீ பொண்ட் என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
பிரான்ஸ் அமைப்பு
மற்றொரு பிரான்ஸ் நாட்டின் தொண்டர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இலங்கை தொடர்பான உப குழுக் கூட்டம் ஜெனிவா மனித உரிமைப் பேரவை வளாகத்தின் 27 ஆவது குழு அறையில் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை நடைபெறவுள்ள இந்த உப குழுக் கூட்டத்தில் பல்வேறு நிபுணர்களும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
எதிர்வரும் 19 ஆம் திகதி மாலை 3 மணிக்கு தமிழ் உலகம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இலங்கை மனித உரிமை தொடர்பான உப குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. நிலைமாறு கால நீதி என்ற தலைப்பில் இந்தக் கூட்டம் 11 ஆவது இலக்க அறையில் நடைபெறவுள்ளது.
மற்றுமொரு சர்வதேச மனித உரிமை அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இலங்கை தொடர்பான உப குழுக் கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை வளாகத்தின் 27 ஆவது குழு அறையில் நடைபெறவுள்ளது. பாரதி கலாசார நிலையம் ஏற்பாடு செய்யது இலங்கை தொடர்பான உப குழுக் கூட்டம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இலங்கை மனித உரிமையின் நிலைமைகள் என்ற தலைப்பில் இடம்பெறவுள்ள இந்தக கூட்டத்தில் கூட்டம் 22 ஆவது குழு அறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலுவூட்டல் மற்றும் சமூகத்திற்கான அபிவிருத்தி என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இலங்கை தொடர்பான ஒரு உபகுழுக் கூட்டம் 21ஆம் திகதி ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. மாலை 3 மணி முதல் 4 மணி வரை 24 ஆவது குழு அறையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அனைத்துவிதமான அநீதிகளும் எதிரான சர்வதேச இயக்கம் இலங்கை தொடர்பான 22 ஆம் திகதி ஒரு உப குழுக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. ஐ.நா. மனித உரிமைப் பேரவை வளாகத்தின் 27 ஆவது குழு அறையில் மாலை 4 மணிக்கு இக்கூட்டம் நடைபெறும்.
சர்வதேச பௌத்த நிவாரண அமைப்பின் உபகுழுக் கூட்டம்
சர்வதேச பௌத்த நிவாரண அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் இலங்கை தொடர்பான உபகுழுக் கூட்டம் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது. பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகும் இந்த உபகுழுக் கூட்டத்தில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் வளாகத்தின் 15 ஆவது குழு அறையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அநீதிகளுக்கு எதிரான அமைப்பு
அத்துடன் 26 ஆம் திகதி 12 மணிக்கு இலங்கை தொடர்பான ஒரு உப குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. சகலவிதமான அநீதிகளுக்கும் எதிரான சர்வதேச இயக்கம் ஏற்பாடு செய்துள்ள இந்தக் கூட்டம் 27 ஆவது குழு அறையில் நடைபெறவுள்ளது. மற்றும் பிரான்ஸ் சர்வதேச நிறுவனம் ஒன்றினால் இலங்கை தொடர்பான உப குழுக் கூட்டம் ஒன்று 26 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவும் குழு அறை 27 இல் பிற்பகல் 1.30 இற்கு ஆரம்பமாகும்.
பசுமை தாயகம்
இதேவேளை இந்தியாவின் பசுமை தாயகம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இலங்கை தொடர்பான உபகுழுக் கூட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது. பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்படவிருக்கிறது.
இலங்கை மனித உரிமை நிலைமை மற்றும் அநீதி என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை தொடர்பான ஒரு உபகுழுக் கூட்டம் இறுதியாக ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. சர்வதேச பௌத்த நிவாரண அமைப்பு இதனை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வு குழு அறை 15 இல் நடைபெறும்.