ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஸ்ரீலங்காவுடன் இணைந்து செயலாற்றவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த தகவலை தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மிகவும் சிறந்த முறையில் காணப்படுவதாக தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் நிலை காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தற்போதைய அரசாங்கம் அனைத்து ஸ்ரீலங்கா மக்களுக்கும் பயன்தரக் கூடிய வகையில் புதிய சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அரங்கில் தனது பெயரைத்தக்க வைத்துக் கொள்ள ஸ்ரீலங்கா குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் வலியுறுத்தியுள்ளார்.