ஜெயலலிதாவின் உடலை சந்தனப் பேழையில் வைத்து மூடுவதற்கு முன்பு ஓடி வந்து பார்த்த பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி, கண்ணீர் பொங்க ஜெயலலிதாவுக்கு விடை கொடுத்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா எங்கு சென்றாலும் அவரது வாகனத்தின் முன்பு ஒருவர் ஓடிக் கொண்டிருப்பார். முதல்வரை யாரும் நெருங்கி விடாமல் கவனமாக பார்த்துக் கொள்வார். முதல்வர் சொல்வதற்கு முன்பே அவரது சிந்தனை அறிந்து செயல்படுவார். இதனாலேயே ஜெயலலிதா அவரை ‘அப்பு’ என்று செல்லமாக அழைப்பார். அவர்தான் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி ஏடிஎஸ்பி பெருமாள்சாமி.
ஜெயலலிதாவின் பாதுகாவலராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர் பெருமாள்சாமி. முதல்வர் ஜெய லலிதாவின் இறுதி வழியனுப்பு விழாவில் சமாதியில் கடைசியாக அவருக்கு உருக்க முடன் விடை கொடுத்தது காண்போர் நெஞ்சை கலங்க வைத்தது.
முதல்வர் ஜெயலலிதா 1991 முதல் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வருகிறார். இடையில் சில ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் முதல்வர் ஜெயலலிதா வின் சிறப்பு பாதுகாப்பு பிரிவில் ஏடிஎஸ்பியாக இருந்தார். ஜெயலலி தாவின் பாதுகாப்பு வாகனமான கான் வாயில் முக்கிய தலைமை அதிகாரி இவர். இவரன்றி ஒரு அணுவும் அசையாது. ஜெய லலிதா ஒரு இடத்துக்கு செல்கிறார் என்றால் முதலில் பெருமாள்சாமிதான் அந்த இடத்தை சென்று பார்வையிடுவார். அதன் பின்னரே ஜெயலலிதா வருவார்.
முதல்வர் ஒரு இடத்துக்கு செல்லும் போது, பொதுமக்கள், தொண்டர்கள் இடையே இறங்கி வேகமாக முதல்வர் காருடன் ஓடிவருவார். முதல்வர் வாகனம் நின்றவுடன் அவரது எண்ணமறிந்து செயலாற்றுவார். முக்கியப் பிரமுகர்கள், தொண்டர்கள் என யாராக இருந்தாலும் பெருமாள்சாமி, முதல்வர் கண்ணசைவை நோக்கியே செயலாற்றுவார்.
முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பாதுகாவலராக பல ஆண்டுகள் அன்புக்குரியவராக விளங்கிய பெருமாள் சாமி, ஜெயலலிதா முதுமலை வன விலங்கு சரணாலயத்தில் குட்டி யானை யால் தாக்கப்பட்டு கீழே விழ இருந்த போது, அவரை தாங்கி பிடித்தார். முதல்வரின் பாதுகாவலராக மட்டும் அல்லாமல் அவரது விசுவாசியாக மாறிப் போனார்கள் பாதுகாவலர்கள்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் பெருமாள் சாமி உட்பட அனைத்து பாதுகாவ லர்களும் அவர் நலம் பெற்று வந்து ஐந்தாண்டு ஆட்சியை நிறைவு செய் வார் என்று நம்பி இருந்தனர். ஆனால் பேரிடியாக மறைவு செய்தி அவர்களை தாக்கியது. ஜெயலலிதாவின் உடல் மருத்துவமனையிலிருந்து கான்வாய் போலவே கிளம்பியது. முதல்வர் உயிரோடு இருந்தபோது எப்படி பரபரப்பாக செயல்பட்டாரோ, அதே பரபரப்புடன் அவரது உடலை அப்போலோ மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டனுக்கு எடுத்துச் செல்லும்போதும் செயல்பட்டார் பெருமாள்சாமி.
மறுநாள் ஜெயலலிதா உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப் பட்ட போதும், அவரது இறுதி ஊர்வலத் திலும், அவரது சமாதி அமைக்கப்படும் இடத்தில் அவர் சமாதியில் அடக்கம் செய்யப்படும் அனைத்து ஏற்பட்டையும் பெருமாள்சாமி முன்னின்று செய்தார்.
அவரது உடல் கடைசியாக சந்தனப் பேழையில் வைக்கப்பட்டு அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு பெட்டியை மூடும் முன்னர் எங்கிருந்தோ ஓடி வந்தார் பெருமாள்சாமி. கனத்த இதயத்துடன் ஜெயலலிதாவின் முகத்தை சில விநாடிகள் ஆழ்ந்து உற்று நோக்கினார். வழக்கமாக ஜெயலலிதா புறப்படும் முன்னர் அவர் கண்ணசைவை நோக்குவார் பெருமாள் சாமி. ஆனால் இந்தமுறை கண்மூடி மீளா துயிலில் இருக்கும் ஜெயலலிதா, பெருமாள்சாமிக்கு எந்த உத்தரவும் இடவில்லை.