முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்டறிந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் நன்றாக இருப்பதாகவும், விரைவில் அவர் பூரண நலம் பெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் உடல்நலம் பெற அதிமுகவினர் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
அப்போலோ மருத்துவமனை வளாகத்திலேயே அதிமுகவினர் பிரார்த்தனைகளும் செய்து வருகின்றனர். ஏராளமான அதிமுகவினர் தினந்தோறும் குவிந்து வருவதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதல்வரின் உடல்நிலை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அப்போலோ சென்று முதல்வரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் நலம் விசாரித்தனர்.
இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று காலை 11.40 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார்.
அங்கிருந்து காரில் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். அங்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ராகுல் வருகைக்காக காத்திருந்தார். பின்னர், ராகுலுடன் அவர் மருத்துவமனைக்குள் சென்றார்.
அங்கு முதல்வரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் ராகுல் கேட்டறிந்தார்.சுமார் 35 நிமிடத்திற்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நல்வாழ்த்துகளை தெரிவிக்க முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அப்போலோ மருத்துவமனைக்கு வந்தேன்.
முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் உடல்நலம் பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முதல்வர் விரைவில் பூரண நலம் பெறுவார் என்று கூறினார்.