ஜேர்மனியின் லியூபெக் நகரில் திடீரென பேருந்து பயணிகளை கத்தியால் தாக்கிய ஒரு நபரை பொலிசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
உள்ளூரைச் சேர்ந்த 34 வயதுடைய ஜேர்மன் குடிமகன் ஒருவர் திடீரென பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த சக பயணிகளை கத்தியால் தாக்கத் தொடங்கினார். 10 முதல் 14 பயணிகள் வரை காயமுற்றதாகத் தெரிகிறது.
ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஒருவர் எழுந்து தனது சீட்டை வயதான ஒரு பெண்மணிக்கு கொடுக்கவும் குறிப்பிட்ட நபர் அவரைக் கத்தியால் நெஞ்சில் குத்தினார்.
பேருந்தில் பயணிகள் தாக்கப்படுவதைக் கண்ட பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தினார்.
பேருந்திலிருந்து பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். கத்தியால் தாக்கிய மனிதனை பொலிசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
விசாரணையில் அந்த நபர் தீவிரவாதப் பின்னணியோ அரசியல் பின்னணி கொண்டவரோ இல்லை என தெரியவந்துள்ளது.
பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.