ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான விமானமொன்று 15 மணித்தியாலங்கள் தாமதமாக பயணத்தை ஆரம்பிக்க காரணமாக இருந்ததாக கூறப்படும் அவ்விமானத்தின் தலைமை விமானி உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி இடை நிருத்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மனியின் ஃபிராங்ஃபர்ட் விமான நிலையத்தில் UL554 எனும் விமானத்தின் தலைமை விமானி (கெப்டன்) மதுபான பரிசோதனையில் தோல்வியடைந்ததன் விளைவாக அவரால் விமானத்தை செலுத்த முடியாது போனதாகவும் இதனால் 15 மணி நேர தாமதத்தின் பின்னர் பிறிதொரு விமானியைப் பயன்படுத்தி விமானத்தை இலங்கை நோக்கி செலுத்தி வந்ததாகவும் தெரிவிக்கும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், அது தொடர்பிலான விசாரணைகளுக்காகவே பணி இடை நிறுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.
ஃபிராங்ஃபர்ட் விமான நிலையத்தில் குறித்த தலைமை விமானி தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து அவர் மதுபோதையில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளுக்கு குறித்த விமான நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான UL554 எனும் விமானம், கடந்த வெள்ளியன்று பிற்பகல் 3.20 மணிக்கு ப்ரங்பேர்ட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்கவிற்கான பயணத்தை ஆரம்பிக்கவிருந்தது.
இந்த விமானத்தில் கட்டுநாயக்க நோக்கி பயணிப்பதற்காக, 259 பயணிகள் தயாராகவிருந்தனர்.
எனினும், விமான பணியாளரொருவர் வருகை தராமையால் விமானம் புறப்படுவதில் 15 மணித்தியால தாமதம் ஏற்பட்டது.
ஃப்ரங்க்ஃபர்ட் விமான நிலையம் இரவு நேரத்தில் மூடப்படுகின்றமையால், மறு நாள் சனியன்று காலை 6.20 இற்கே விமானம் இலங்கையை நோக்கி புறப்பட்டது.
மது போதையில் இருந்த தலைமை விமானிக்கு பதிலாக, கொழும்பிலிருந்து ஃப்ரங்க்ஃபர்ட் நோக்கிப் பயணித்த மற்றுமொரு விமானத்திலிருந்த விமானி, விமான நிறுவனத்தின் சட்ட விதிமுறைகளுக்கமைய கடமையில் ஈடுபடுத்தப்பட்டார்.
விமானம் தாமதமான நேரப்பகுதியில் பயணிகளுக்கு, உணவு மற்றும் தங்குமிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாமதம் தொடர்பில் பயணிகளிடம் மன்னிப்புக் கோரியுள்ள விமான நிறுவனம், ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளுக்கு அமைய தாமதத்திற்காக பயணிகளுக்கு நட்ட ஈட்டைப் பெற்றுக்கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்கு விதிமுறைகளுக்கமைய, மூன்று மணித்தியாலங்களுக்கு அதிக நேரம் தாமதம் ஏற்படும் பட்சத்தில் விமான நிறுவனத்திடமிருந்து நட்ட ஈடு பெற்றுக்கொள்ள முடியும்.
ஐரோப்பாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத 3500 கிலோமீற்றர்களை விட அதிகத் தொலைவிலிருக்கும் நாடொன்றிற்கு மூன்று மணித்தியாலங்கள் தாமதம் ஏற்பட்டால், பயணிகளுக்கு தலா 600 யூரோக்களை நட்ட ஈடாக செலுத்த வேண்டும்.
ஃப்ரங்க்ஃபர்ட் மற்றும் கட்டுநாயக்கவிற்கு இடையிலான விமானப் பயண தூரம் 8087 கிலோமீற்றர்களாகும்.
இதற்கமை, பயணியொருவருக்கு 600 யூரோக்களை ஶ்ரீலங்கல் விமான நிறுவனம் செலுத்த வேண்டியேற்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களுக்கு அமைய, ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் பயணியொருவருக்கு செலுத்த வேண்டிய தொகை 96,960 ரூபாவாகும்.