ஜோக்கர்…. வேடிக்கை மனிதர்களுக்கு ஒரு செருப்படி!

248

நடிகர்கள்: குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், மு ராமசாமி, பவா செல்லத்துரை, காயத்ரி கிருஷ்ணா இசை: சீன் ரோல்டன் ஒளிப்பதிவு: செழியன் எழுத்து – இயக்கம்: ராஜு முருகன் யாரையும் நம்ப முடியாத இன்றைய உலகில், எவ்வளவு பெரிய அநியாயம் அல்லது கொடுமையையும் வேடிக்கையாய் கடந்து போகும்.. அல்லது குதற்கக் கேள்வி எழுப்பி நீர்த்துப் போகச் செய்யும் இன்றைய வக்கிரம் பிடித்த சூழலில் இப்படி ஒரு சினிமா சாத்தியமா? அதை சென்சார் அனுமதிக்குமா? இரண்டுமே நடந்திருக்கிறது… விளைவு ஜோக்கர்! ‘இந்த நாட்ல வாழ்றதுதான் கஷ்டம்னா… பேள்றதும் கஷ்டமாப் போச்சே’ என படத்தில் ஒரு பாத்திரம் பேசும் வசனம்தான் படத்தின் மையக் கரு. View Photos டாய்லட் கட்டுவதில் கூட எந்த அளவு கொள்ளையடிக்கிறார்கள் அதிகார வர்க்கமும் ஆளும் வர்க்கமும் என்பதை இத்தனை பட்டவர்த்தனமாக இதுவரை யாரும் காட்சிப்படுத்தியதில்லை. இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் எங்கள் ஊரைச் சுற்றிய 12 கிராமங்களில் நடந்த தொகுப்பு வீடு கட்டுதல், அம்மா வீடு கட்டுதல் மற்றும் இலவச கழிப்பிடம் கட்டுவதில் நடந்த கேவலங்களைக் கண் முன்னே நிறுத்தின. View Photos இதேமாதிரிதான் கலர் கலர் கதவுகளைப் பின்னணியில் வைத்து புகைப்படம் எடுத்து அனுப்பி, ஒரு கக்கூஸ் தொட்டியை மட்டும் கையில் கொடுத்து அனுப்பினார்கள் அதிகாரிகள். வீடுகட்ட அரசு ஒரு லட்சம் ஒதுக்கினால், அதில் 50 ஆயிரம் கூட கைக்கு வராத நிலைதான் இன்றும் கிராமங்களில். இடிந்து விழுந்த கழிப்பிடத்துக்குள் சிக்கி முக்கால் உயிரை விட்ட கர்ப்பிணிப் பெண்ணை, ஜனாதிபதி பேசிவிட்டுப் போகும் வரை பெஞ்சில் கிடைத்திவிட்டு, கத்தும் அவள் கணவனை வீட்டுக்குள் அடைக்கும் கொடூரம்தான் இந்த நாட்டில் அவ்வப்போது கொண்டு வரப்படும் திட்டங்களின் லட்சணங்கள். View Photos ஹெலிகாப்டரைப் பார்த்துக் கும்பிடும் கேவலத்தையும், அரை மணி நேர உண்ணாவிரத அற்பத்தனைத்தையும் தொட தனி தைரியம் வேண்டும். இந்தப் படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் இந்த சமூகத்தின், அதன் அலட்சிய மனிதர்கள் மீதான சுளீர். View Photos “அப்பல்லோவுக்கு எடுத்துட்டுப் போகணும்னா எதுக்கு கவர்மென்ட்? ஓட்டை எல்லாம் அப்பல்லோவுக்கு குத்தலாமா?” ‘நாம ஓட்டு போட்டுதானே அவன் ஆட்சிக்கு வர்றான். அதுக்கு மட்டும் நமக்கு உரிமை இருக்கு. அவன் அநியாயம் பண்ணா அவனை டிஸ்மிஸ் பண்ண உரிமையில்லையா?’ ‘நகைக்கடைக்காரன் புரட்சி பண்ற நாட்ல, ஜனாதிபதி புரட்சி பண்ணக் கூடாதா?’ ‘சகாயம் பண்ணுங்கனு சொல்லலை… சகாயம் மாதிரி பண்ணுங்க’னுதான் சொல்றோம்…’ ‘இந்த ஜனங்க இப்படிதான். தீயவங்க பின்னாடி போகும். கெட்டவங்களை ஜெயிக்க வைக்கும். அபத்தங்களைக் கொண்டாடும். அதுக்காக நாமளும் அப்படியே பதவிக்கும் பவுசுக்கும் அடிமையாக முடியுமா… இதுக்கு பதிலா பீ தின்னலாம்…. பெத்த அம்மாவையும் கட்ன பொண்டாட்டியையும் விலைக்கு விக்கலாம்..!’ -இன்னும் இன்னும் நிறைய… இன்றை சூழலில், குறிப்பாக சமூக வலைத்தளங்களால் வக்கிரம் சூழ்ந்த மனத்துடன் இளைஞர்கள் திரியும் இந்தச் சூழலில் இந்தப் படம் கட்டாயம். படத்தில் நடித்த யாரும் நடிகர்களாய்த் தெரியவில்லை என்பதுதான் சிறப்பு. குரு சோமசுந்தரம், மு ராமசாமி, பவா செல்லத்துரை, ரம்யா பாண்டியன், காயத்ரி கிருஷ்ணா… என மொத்த நடிகர் குழுவுக்கும் பாரபட்சமில்லாத பாராட்டுகள். பலப்பல நூதன போராட்டங்களை ராஜு முருகன் இதில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவை இனி செயல்வடிவம் பெறும் காலமும் வரும். சீன் ரோல்டனின் இசையை விட, யுக பாரதியின் சவுக்கடி வரிகள் பாடல்களைக் கவனிக்க வைக்கின்றன. எடிட்டர் வேலுசாமி இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக்கியிருக்கலாம் பின்பாதி காட்சிகளை. செழியனின் ஒளிப்பதிவு தர்மபுரியின் வறண்ட கிராமங்களை அசலாகக் காட்டியுள்ளது. ஏபிசி என்று ஏரியா பார்க்காமல் போய்ச் சேர்க்கப்பட வேண்டிய படைப்பு இது.

l

SHARE