மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் அவர்களை சிலர் திட்டமிட்டு படுகொலை செய்தனர் என மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் சர்வதேச மட்டத்திற்கு எடுத்து சென்ற ஜோசப் பரராசசிங்கம் அவர்களை திட்டமிட்டு படுகொலை செய்தனர் என்பதை தான் உறுதியாக நம்புவதாக அவர் தெரிவித்தார்.
2005ம் ஆண்டு நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 10வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு இன்று மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி இளைஞர் அணியின் ஏற்பாட்டில் மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கி. சேயோன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஓய்வு நிலை பேராசிரியர் க. பத்மநாதன் சிறப்புரையாற்றினார்.
மட்டக்களப்பு ஆயர் அதி வண பொன்னையா யோசப் ஆண்டகை, சிவயோகச் செல்வன் சாம்பசிவ குருக்கள், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், சா. வியாளேந்திரன், சீ.யோகேஸ்வரன்,
கிழக்கு மாகாண அமைச்சர் கி. துரைராஜசிங்கம், மாகாண சபை பிரதித்தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், உறுப்பினர்களான இரா. துரைரெத்தினம், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா. நடராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா மற்றும் பா. அரியநேத்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நத்தார் நள்ளிரவு ஆராதனை முன்னாள் மட்டக்களப்பு – திருகோணமலை ஆயர் வண கிங்ஸிலி சுவாம்பிள்ளையினால் நடாத்தப்பட்டுக் கொண்டிருந்த வேளை தேவாலயத்திற்குள் வைத்து துப்பாக்கிதாரிகளினால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சம்பவத்தில் அவரது மனைவி சுகுணம் யோசப் உட்பட சிலர் காயமடைந்தனர்.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக 10 வருடங்களின் பின்னர் குற்றப்புலனாய்வுத் துறையினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் பிள்ளையான் ஒட்டுக்குழு தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், பிள்ளையான்குழு தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் ரெங்கசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Readers Comments (0)