எஞ்சிய 248 ஏக்கர் எப்போது விடுவிப்பு? – வலி.வடக்கு மக்கள் கேள்வி

296

 

அமைச்சரவை அனுமதித்த எஞ்சிய 248 ஏக்கர் நிலப் பரப்பு யாழ்.வலிகாமம் வடக்கில் எப்போது விடுவிக்கப்படும் என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வலி.வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் விடுவிக்கப்படுவது தொடர்பில், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் வலி.வடக்கில் எவ்வளவு ஏக்கர் காணி விடுவிக்கப்படுவது என்பது குறிப்பிடப்படவில்லை.

ஆனால், அமைச்சரவை முடிவை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனரத்ன, வலி.வடக்கில் 948 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்கு முன்பாகவே, கடந்த மாதம் 30 ஆம் திகதி வலி.வடக்கில் 701 ஏக்கர் விடுவிக்கப்பட்டிருந்தது. மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் காணி விடுவிப்பு தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்குச் சமர்ப்பிப்பதற்கு முன்பதாக, ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருந்தார்.

இதற்கமைய ஜனாதிபதியினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு 701 ஏக்கர் விடுவிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் அமைச்சரவையில், வலி.வடக்கு காணி விடுவிப்புக்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்பிக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டதைப் போன்று 948 ஏக்கர் விடுவிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தால் எஞ்சிய 248 ஏக்கரும் எப்போது விடுவிக்கப்படும் என்று வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

SHARE