சிங்கப்பூர் டபிள்யு.டி.ஏ. பைனல்ஸ் தொடரின் அரை இறுதிக்கு பிளிஸ்கோவா தகுதி பெற்றுள்ளார். சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் வீராங்கனைகள் மோதும் டபிள்யு.டி.ஏ. பைனல்ஸ் தொடர் சிங்கப்பூரில் நடக்கிறது. இதில், வெள்ளைப் பிரிவு ரவுண்ட் ராபின் லீக் சுற்றில் நேற்று நடந்த போட்டியில், செக் குடியரசை சேர்ந்த கரோலினா பிளிஸ்கோவா (7வது ரேங்க்), சக நாட்டவரான பெட்ரா குவித்தோவாவை எதிர்த்து விளையாடினார்.இதில் அபாரமாக ஆடிய பிளிஸ்கோவா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இப்போட்டி ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் நடந்தது. 4 முறை குவித்தோவாவை சந்தித்துள்ள பிளிஸ்கோவா தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். மேலும், 3 ரவுண்ட் ராபின் லீக் சுற்றை நிறைவு செய்துள்ள அவர் 2 வெற்றியுடன் இத்தொடரில் முதல் வீராங்கனையாக அரை இறுதிக்குள் நுழைந்துள்ளார். 2011ல் டபிள்யு.டி.ஏ. பைனல்சில் சாம்பியன் பட்டம் வென்ற குவித்தோவா தொடரிலிருந்து வெளியேறி உள்ளார்.