பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 360 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
வார்னர் சதம் விளாசல்
பெர்த்தில் 14ஆம் திகதி அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் தொடங்கியது.
அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 487 ஓட்டங்கள் குவித்தது. டேவிட் வார்னர் 164 ஓட்டங்கள் விளாசினார்.
பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 271 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக இமாம் உல் ஹக் 62 ஓட்டங்கள் எடுத்தார்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய அவுஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கு 233 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இமாலய இலக்கு
இதனால் பாகிஸ்தானுக்கு 450 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட் ஆகியோரின் தாக்குதல் பந்துவீச்சில் பாகிஸ்தான் உருகுலைந்தது. அப்துல்லா ஷஃபிக், கேப்டன் ஷான் மசூட் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழக்க, இமாம் உல் ஹக் 10 ஓட்டங்களில் வெளியேறினார்.
பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 14 ஓட்டங்களில் கம்மின்ஸ் ஓவரில் அவுட் ஆனார்.
லயன் 500 விக்கெட்
அதன் பின்னர் பாகிஸ்தானின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் ஒருபுறம் தாக்குதல் தொடுக்க, சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் (Nathan Lyon) டெஸ்டில் தனது 500வது விக்கெட்டை கைப்பற்றினார்.
இதன்மூலம் சர்வதேச அளவில் இந்த மைல்கல்லை எட்டிய 8வது வீரர் என்ற சாதனையை லயன் படைத்தார்.
இதற்கிடையில் அணியை மீட்க போராடிய சவுத் ஷகீல் (24) ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து கடைசி விக்கெட்டாக குர்ரம் ஷசாத் அவுட் ஆனார்.
இதனால் பாகிஸ்தான் அணி 89 ஓட்டங்களில் சுருண்டது. அவுஸ்திரேலிய அணியின் தரப்பில் ஸ்டார்க், ஹேசல்வுட் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.