டெஸ்ட்: இந்திய அணியை மீட்டுக்கொண்டு வந்த அஸ்வின்!

248

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட் செய்யத் தொடங்கியுள்ள இந்திய அணி, முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மேற்கிந்தியத் தீவுகளின் கிராஸ் ஐஸ்லெட்டில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இந்தியாவின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுலும், ஷிகர் தவனும் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 9-ஆக இருந்த நிலையில் தவன் ஆட்டமிழந்தார். 4 பந்துகளுக்கு 1 ரன் எடுத்திருந்த அவர், கேப்ரியேலின் பந்துவீச்சில் டவ்ரிச்சிடம் கேட்ச் கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து வந்த கேப்டன் கோலி நிலைத்து ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 8 பந்துகளுக்கு 3 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அல்ஸாரி ஜோசப்பின் பந்துவீச்சில் டேரன் பிராவோவிடம் கேட்ச் கொடுத்து அவர் ஆட்டமிழந்தார். 65 பந்துகளில் அரை சதமடித்த ராகுல், 50 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்ட ரோஹித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஓரளவு தாக்குப்பிடித்த ரஹானே, 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

5 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தநிலையில், பிறகு ஜோடி சேர்ந்த அஸ்வினும் சாஹாவும் மேலும் விக்கெட்டுகள் விழாமல் இந்திய அணியைக் காப்பாற்றினார்கள். முதல் நாள் முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில், அல்ஸாரி ஜோசப், சேஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அஸ்வின் 75, சாஹா 46 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

SHARE