டேவிட் அய்யா காலமாகியதை குறித்து இலங்கை தமிழ் நாளிதழ்கள் செய்தி வெளியிடாதது ஏன்?

272
ஈழப் போராளி டேவிட் அய்யா காலமாகியது குறித்து இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்கள் எவையும் செய்தி வெளியிடாதது மிகவும் அதிருப்தி தரும் விடயமாகும் இவ்வாறு உலகத் தமிழ் வானொலி GTBC.FMஇன் பத்திரிகை கண்ணோட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குளோபல் தமிழ் குழுமத்தின் உலகத் தமிழ் வானொலியான GTBC.FMஇல் வார நாட்களில் இடம்பெறும் பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சியில் இலங்கை தமிழ் நாளிதழ்கள் குறித்த பார்வை இடம்பெறுகின்றது. அதன் இன்றைய நிகழ்ச்சியிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டது பின்வருமாறு:
அண்மையில் ஈழப் போராளியும் காந்தியவாதியுமான டேவிட் அய்யா கிளிநொச்சியில் காலமாகியிருந்தார். ஈழப்போராட்டத்தில் மிகவும் பங்களிப்பை நல்கிய டேவிட் அய்யா இலங்கை அரசின் ரெக் புக் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தார்.
இவர் தனது இறுதிக்காலத்தை கழிக்க கிளிநொச்சி திரும்பியிருந்த நிலையில் கடந்த 11ஆம் திகதி காலமானார். டேவிட் அய்யாவின் மரணம் குறித்தும் அவரது பங்களிப்பு குறித்தும் பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் எதுவும் செய்தி வெளியிடவில்லை.
யாழ் பிராந்திய நாளிதழ் ஒன்று மாத்திரமே டேவிட் அய்யாவின் மரணம் குறித்து செய்தி வெளியிட்டிருந்தமையையும் அவரது பங்களிப்பு குறித்து தனது ஆசிரியர் தலையங்கத்தில் எழுதியிருந்தது.
தமிழ் மக்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்றும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அதற்காக பலப் பணியாற்றி சிறைகளில் அடைக்கப்பட்டு தமிழகத்தில் அகதியாக வாழ்ந்து மடிந்தவர் அவர்.
டேவிட் அய்யா தன் வாழ் நாளையே தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்தவர். கட்டட கலை நிபுணராக அதில் பல பட்டங்கள் பெற்று பல நாடுகளுக்குச் சென்று தமிழ் மக்களுக்காக இறுதி மூச்சுவரை வாழ்ந்த அவருக்கு தமிழ் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுக்காதது ஏன்?
நேற்றைய தினம் கிளிநொச்சியில் டேவிட் அய்யாவின் இறுதி நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொள்ளாமைக்கு தமிழ் பத்திரிகைகள் அவரது மரணம் குறித்து செய்தி வெளியிடாமையே காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டது.
நடிகை மனோரமா காலமாகிய நாள் முதல் அவர் குறித்து தொடர்ச்சியாக வர்ண கட்டுரைகளை வெளியிடும் தமிழ் நாளிதழ்கள் ஈழ மக்களுக்காக போராடி தன் வாழ்வு என்ற பற்றினை துறந்த மாமனிதருக்காக எந்த பதிவும் இடம்பெறவில்லை என்றும் டேவிட் அய்யாவின் இறுதி நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்டது.
எவ்வாறெனினும் சமூக வலைத்தளங்களும் இணைய ஊடகங்களும் டேவிட் அய்யாவின் மரணம் தொடர்பில் செய்திகளையும் நினைவுகளையும் பகிர்ந்திருந்தன. அதன் காரணமாக இளைய தலைமுறையினர் பலர் டேவிட் அய்யா குறித்து அறிய முடிந்தது.
தற்கால இளைய தலைமுறை அதிகம் ஒன்றியிருக்கும் இணைய ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் டெவிட் அய்யா குறித்து பல நினைவுப் பகிர்வுகள் இடம்பெற்றன.
இவ்வாறான நிலமைகளிலேயே சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய ஊடகங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அத்துடன் இந்திய ஊடங்களும் டேவிட் அய்யாவின் மரணம் தொடர்பில் செய்திகளைப் பிரசுரித்திருக்கின்றன.
டேவிட் அய்யாவின் மரணம் குறித்த செய்தியை வெளியிடாமல் நடந்து கொண்ட இந்தச் செயல் தமிழ் மக்கள் குறித்த அவரது கனவுக்கு அவரது இலட்சியத்திற்கு மதிப்பளிக்காத செயலே
SHARE