டேவிட் ஐயா ஒரு கவசம்” முருகேசு சந்திரகுமார்:-

304

தமிழர்களின் பிரதிநிதித்துவத்தைப் பேணுவதில் தீர்க்கதரிசனமான கண்ணோட்டத்துடன் இயங்கியவர் டேவிட் ஐயா. அவர் அன்று போட்ட விதையின் பயனைத்தான் இன்றைய அரசியல்வாதிகள் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். 1970 களிலேயே தமிழ்ப்பிரதேசங்களின் எல்லைப்பகுதிகளில் மலையகத்தமிழர்களைக் குடியமர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார். இதன் மூலம் காணியில்லாத மலையக மக்களுக்குக் காணி கிடைப்பதற்கும் தமிழ்ப்பிரதேசங்களில் எதிர்காலத்தில் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படவும் கூடிய ஒரு நிலையை டேவிட் ஐயா ஏற்படுத்தினார். இதனால்தான் வவுனியா,முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் இன்று தமிழர்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. கூடுதலான தமிழர் பிரதிநிதித்துவமும் பேணப்படுகிறது. எல்லையைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் வடபகுதித்தமிழர்கள் அந்த எல்லைப்புறங்களை நோக்கி நகரத்தயாராக இருக்கவில்லை. ஆனால், டேவிட் ஐயா சாத்தியப்படக்கூடிய வழிகளைப்பற்றியே சிந்தித்தார். நடைமுறைக்குப் பொருத்தமான – தம்மால் செய்யக்கூடிய திட்டங்களையே போட்டார். தாம் உருவாக்கிய திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். தாங்கள் நேசிக்கின்ற மக்களை நல்ல நிலைக்குக் கொண்டு  வரவேண்டும் என்று அதற்காகத் தம்மை அர்ப்பணித்து உழைத்தார்.

இதையெல்லாம்  உணர்ந்து கொள்ளும் நிலையில் அன்று மட்டுமல்ல இன்றைய தமிழ் அரசியல்வாதிகளிலும் எவரும் இல்லை. இதுதான் எங்களுடைய சோகமாகும். பாதிக்கப்பட்ட மக்களின் நலனும் தமிழர் பலமும் சீராக இருக்க வேண்டும் எனச் சிந்தித்து அன்றே டேவிட் ஐயாவும் டொக்ரர் ராஜசுந்தரமும் முன்னின்று தீர்க்கதரிசனமாகச் செயற்பட்டிருக்கிறார்கள். அன்றைய காலகட்டத்தில் அரசியல் ரீதியாக மிகுந்த செல்வாக்கோடிருந்தவர்கள் இதைப்பற்றிச் சிந்திக்கவில்லை. இந்த நிலை பேணப்பட வேண்டும் என்று இதற்காகச் செயற்படவும் இல்லை.

வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் உள்ள பல கிராமங்கள் காந்தியத்தினால் உருவாக்கப்பட்டவை. அங்குள்ள மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும் அவர்களுடைய கல்விக்காகவும் காந்தியம் உழைத்திருக்கிறது. நெடுங்கேணிப் பிரதேசத்தில் டொலர் பாம், கென்பாம் பகுதிகளிலும் கிளிநொச்சியிலும்  காந்தியத்தின் செயற்பாட்டு எல்லை விரிவாக்கம் பெற்றிருந்தது. கிளிநொச்சியில் உள்ள குருகுலமும் அங்கே உள்ள ஊற்றுப்புலம் கிராமமும் காந்தியத்தின் விளைச்சல்தான். இதைப்போல கிழக்கு மாகாணத்திலும் காந்தியம் தன்னுடைய செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு வெளியே உருவாகி, மிகத்திறனாகச் செயற்பட்டு வரலாற்றுப்பதிவை உருவாக்கிய அமைப்பு என்ற வகையில் காந்தியத்திற்கு முதன்மையான இடமுண்டு. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களை வைத்து அரசியல் பண்ணாமல் அவர்களுடைய வாழ்வின் முன்னேற்றத்துக்காகவும் அவர்கள் வேரோடி வாழ வேண்டும் என்பதற்காகவும் அது செயற்பட்டிருக்கிறது. இதுதான் டேவிட் ஐயாவின் நோக்கு நிலையும் காந்தியத்தின் இலட்சியமுமாகும். இன்று டேவிட் ஐயாவை மதிப்பவர்களும் போற்றுகின்றவர்களும் இந்த உண்மைநிலையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் அவருக்குச் செய்கின்ற மரியாதை. அதுதான் வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும்.

தான் வகித்த உயர் பதவியையும் விட்டு விட்டு, தனக்குக் கிடைத்திருந்த உயரிய வாய்ப்புகள் வசதிகளையும் தியாகம் செய்து விட்டு ஏழை மக்களுக்காகத் தொண்டு செய்ய வந்தவர் டேவிட் ஐயா. டேவிட் ஐயாவைப்போலவே வசதி, வாய்ப்புகளைக் கொண்டிருந்தவர் டொக்ரர் ராஜசுந்தரமும். ஆனால், இவர்கள் இருவரும் தங்களுக்கு முன்னே உள்ள சமூக யதார்த்தத்தைக் கவனத்திற் கொண்டு, மக்களின் தேவைகளை உணர்ந்து தீர்க்கதரிசனமாகத் திட்டங்களை மேற்கொண்டவர்கள். எந்த வகையான அரசியற் பின்புலமும் பொருளாதாரப் பின்புலமும் இல்லாமலே 1970 களில் காந்தியத்தை தாங்கள் கொண்டிருந்த நம்பிக்கையையும் அர்ப்பணிப்பான உழைப்பையும் மக்களின் மீதான உண்மையான நேசிப்பையும் கொண்டே உருவாக்கி வளர்த்தவர்கள். இவர்களுடைய வழி நடத்தலில் செயற்பட்ட பலர் நல்ல ஆளுமைகளாக இருந்தவர்கள் இப்பொழுதும் பல கிராமங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

டேவிட் ஐயாவும் டொக்ரர் ராஜசுந்தரமும் ஒருவருக்கொருவராக இணை நின்று செயற்பட்டனர். வவுனியாவில் இவர்கள் காலடியும் வியர்வையும் பட்ட கிராமங்கள் இன்று இதற்குச் சிறந்த உதாரணம். இன்று காந்திய இயக்கத்தின் இயங்கு விசை இல்லையென்றாலும் காந்தியத்தின் அடையாளம் வலுவாகத்தான் உள்ளது. ஐந்து ஆண்டுகள்தான் தீவிரமாகச் செயற்பட்ட ஒரு அமைப்பு காலத்தைக் கடந்து, தலைமுறைகளைக் கடந்து இன்றும் பேசப்படுகிறது, நினைவு கூரப்படுகிறது என்றால் அதற்கான காரணம் என்ன என்று நாம் பார்க்க வேண்டும். இந்தத் திரும்பிப்பார்த்தல், இந்த மீளாய்வு இன்று அவசியம். அதுதான் எங்களை நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு உதவும்.

காந்திய இயக்கத்தின் பணிகள் ஐந்து ஆண்டுகள் அளவில்தான் தீவிரமாக இருந்தாலும் பரந்த அளவில் இருந்தன. நீண்ட கால நோக்கு நிலையில் இருந்தன. பாதிக்கப்பட்ட மக்களின் நலனை முன்னிறுத்தி இருந்தன. பாதிக்கப்பட்ட மக்களுடைய பணிகளையே முதன்மையாகச் செய்ய வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும் என்றிருந்தன. இதனால் குறுகிய காலத்திலேயே காந்தியம் பெரிய அறிமுகத்தைப் பெற்றது. அன்றைய நிலையில் அதற்கு உலக அளவில் இருந்த சில தொண்டர் அமைப்புகளும் தமிழ் மக்களும் ஆதரவளிக்க முன்வந்திருந்தனர். அதற்குப் பிறகு அது புளொட்டுடன் தொடர்புபட்டது. ஆயுதப்போராட்ட அமைப்புடன் காந்திய இயக்கமென்ற மக்கள் அமைப்பு – காந்திய வழியிலான அமைப்பு இணைந்து செயற்பட்டமையானது ஒரு புதுமையே. இந்தப் புதுமையின் நன்மைகள் புளொட்டுக்கு – அதாவது ஆயுதப்போராட்ட அமைப்புக்கு அனுகூலமாக இருந்தன.  புளொட் மக்கள் மத்தியில் செல்வாக்கைப்  பெறுவதற்கும் காந்தியத்தினரின் அனுபவங்களைப் புளொட் அமைப்புப் பெற்றுக்கொள்வதற்கும் இந்தத் தொடர்புகள் உதவியாக இருந்தன. ஆனால், புளொட்டுடன் தொடர்புபட்டதனால் ஆயுதப் போராட்டத்துக்கு அரச தரப்பு வைத்த குறியில் காந்தியத்தின் செயற்பாடுகள் விரைவில் முடக்கம் கண்டன. டேவிட் ஐயாவும் டொக்ரர் ராஜசுந்தரமும் சிறைவரை செல்ல நேர்ந்தது. ஆனால், அவர்கள் புளொட்டுடன் தொடர்பு படாமல் இருந்திருந்தாலும் தமிழ்ப்பிரதேசங்களின் மீது அன்று மேற்கொள்ளப்பட்ட அரச ஒடுக்குமுறையானது காந்தியத்தைச் செயல்படாமல் முடக்கியே இருக்கும். அத்தோடு எப்படியாவது டேவிட் ஐயாவும் ராஜசுந்தரம் டொக்ரரும் கைது செய்யப்பட்டேயிருப்பர் என்று சொல்லப்படுவதை மறுக்கவும் முடியாது.

டேவிட் ஐயா, ராஜசுந்தரம் ஆகியோரின் கைதுகளுடன் காந்தியமும் முடங்கிப் போனது. ஆனாலும் அது உருவாக்கிய சிந்தனையாளர்களும் செயற்பாட்டாளர்களும் அமைதியான முறையில் உள்ளடங்கி இயங்கிக்கொண்டிருந்தனர். காந்தியத்தின் நினைவுகள் மாறாமல் ஒரு தணிந்த நிழலைப்போல எங்கும் படர்ந்திருந்தன. இன்னும் அந்த நிழல் படர்ந்தேயிருக்கிறது.

ஐந்து ஆண்டுகள் செயற்பட்ட அமைப்பு ஒன்று இன்றும் பேசக்கூடியதாக இருக்கிறதாக உள்ளது என்றால், அதன் வினைத்திறனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அந்த இயக்கத்துடன் மாணவப் பருவத்தில் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். அப்பொழுது டேவிட் ஐயாவைப்பற்றியும் அவருடைய பணிகளைப் பற்றியும் ஆழமாகவும் விரிவாகவும் அறிந்திருக்கவில்லை. என்றாலும் அவர்களுடைய பணிகள் முக்கியமானவை என்ற ஒரு புரிந்துணர்வு இருந்தது. வவுனியாவில் காந்தியம்  மிகப் பிரபலமான ஒரு அமைப்பாக இருந்தது. காந்தியத்துடன் பலரும் சேர்ந்து பணியாற்றினார்கள்.

டேவிட் ஐயா அன்று உருவாக்கிய எல்லைக் கிராமங்கள்தான் இன்று எல்லை பாதுகாப்புக் கிராமங்களாகியுள்ளன. இதை டேவிட் ஐயாவும் டொக்ரர் ராஜசுந்தரமும் காந்தியத்தின் மூலமாகச் சாத்தியப்படுத்திய அளவுக்கு இதற்கு முன்னும் சரி, பிறகும் சரி தமிழ் அரசியல் கட்சிகள் எதுவும் செய்யவில்லை.

தொண்ணூறு வயதிலும் ஒருவர் அரசுக்கு எதிராகப் பார்க்கப்படுகிறார் என்றால், அந்த வயதிலும் அரசைக் கண்டு அவர் அச்சப்பட வேண்டியிருக்கிறது  என்றால், அதன் பின்னே என்ன இருக்கிறது என்று பார்ப்பது அவசியம். டேவிற் ஐயா மரணிக்கும்போது அவருக்கு வயது தொண்ணூறுக்கு மேல். அந்த வயதிலும் அவர் ஒரு தலைமறைவுப் போராளியாகத்தான் வாழ்ந்தார். தலைமறைவு நிலையிலேயே அவருடைய மரணமும் நிகழ்ந்திருக்கிறது. இது ஏன்?

என்னுடைய புரிதலுக்கு உட்பட்டவரையில் இலங்கையில் தமிழ், முஸ்லிம், சிங்களச் சமூகங்களில் கூட இத்தனை வயதில், டேவிற் ஐயாவைப்போல தலைமறைவு நிலையில் இருந்ததும் இறந்ததும் இல்லை என்று எண்ணுகிறேன். ஒரு சிறந்த கல்வியாளர், கட்டிடக் கலையின் துறைசார் நிபுணர், மனிதநேயப்பண்பாளர், அகதிகளை அகதிகளாக வைத்திருக்காமல் அவர்கள் வேரோடி வாழும் மக்களாக வேண்டும் என்று விரும்பியவர், தானே அகதியாகி, இரவல் தாய்நாட்டில் நீண்டகாலம் வாழவேண்டியிருந்ததுதான் வருத்தத்தைத் தருவது. ஆனாலும் இறுதியில் அவர் தன்னுடைய சொந்த மண்ணுக்குத் திரும்பி வந்ததும் அந்த மண்ணிலேயே சங்கமமானதும் ஓர் ஆறுதல். இது பிற தேசங்களில் இருந்து தாய் மண்ணை நேசிப்போருக்காக டேவிட் ஐயா சொல்லிச் சென்ற மகத்தான சேதியாகும்.

தன்னுடைய சிந்தனையாலும் செயற்பாட்டினாலும் தான் சார்ந்த மக்களுக்குக் கவசமாகத் திகழ்ந்த ஒரு முன்னோடியை நாங்கள் இழந்திருக்கிறோம். இந்த இழப்பை ஈடுசெய்ய வேண்டுமானால், அவருடைய சிந்தனையிலிருந்தும் செயற்பாட்டிலிருந்தும் நாம் கற்றுக்கொள்வதும் பெற்றுக்கொள்வதுமேயாகும்.

SHARE