தொழில் அதிபராக இருந்து அமெரிக்க ஜனாதிபதியான டொனால்டு டிரம்பின் வாழ்க்கை வரலாறு வருமாறு
நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியை சேர்ந்த பிரடெரிக் டிரம்ப்-மேரி மெக்லியோட் தம்பதிக்கு 4-வது மகனாக கடந்த 1946-ம் ஆண்டு ஜூன் 14-ந்தேதி பிறந்தவர் டொனால்டு ஜான் டிரம்ப். குயின்ஸ், ஸ்டேட்டன் தீவு, புரூக்ளின் உள்ளிட்ட பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வந்த பிரடெரிக் டிரம்ப், ரியல் எஸ்டேட் துறையில் கொடிகட்டி பறந்தார்.
டொனால்டு டிரம்ப், குழந்தை பருவத்திலேயே சுறுசுறுப்பும், ஆற்றலும் மிகுந்தவராக இருந்ததால் அவரை 13 வயதிலேயே நியூயார்க் ராணுவ அகாடமியில் பெற்றோர் சேர்த்து விட்டனர். அங்கு கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிய டிரம்ப், பள்ளிப்பருவத்தில் சிறந்த தடகள வீரராகவும், மாணவர் தலைவராகவும் ஜொலித்தார்.
1964-ல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த டிரம்ப், 2 ஆண்டுக்குப்பின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட வார்ட்டன் ஸ்கூல் ஆப் பைனான்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.