உலகம் பூராகவும் தற்போது டொனால்ட் ட்ரம்ப் அலை அடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் ஒவ்வொரு நாடும் தமது பூகோள அரசியலுக்கு அமையவும் ட்ரம்பின் வெளிநாட்டு கொள்கைகளுக்கு ஏதுவாக எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து ஆலோசிக்கத் தொடங்கி விட்டனர்.
இதனடிப்படையில் இலங்கையிலும் இவ்வாறான மாற்றங்கள் ஏற்படும் என பல்கலைக்கழக பேராசியர்களும், புத்திஜீவிகளும் கருத்து வெளியிடத் தொடங்கியுள்ளனர்.
தேர்தல் பரப்புரைக் காலப்பகுதியில் டொனால்ட் ட்ரம்ப் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வந்திருந்தார். எனினும் ஜனாதிபதியாக வெற்றி பெற்றதன் பின்னரான அவர் உரை வேறு விதமாக அமைந்திருந்தது. அனைத்து அமெரிக்கர்களையும் பாதுகாக்கும் ஜனாதிபதி நான் எனத் தெரிவித்திருந்தார். இதுவொரு ஆரோக்கியமான ஆரம்பம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்பம் தனது தேர்தல் பிரச்சாரங்களின் போது வெளிநாடுகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் முறை தொடர்பில் அதிகம் பேசவில்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச தொடர்பு தொடர்பிலான பேராசிரியர் நயனி மெலகொட குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அவரின் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எப்படியிருப்பினும் அமெரிக்காவுடன் நட்புறவு கொண்டுள்ள நாடுகளுடன் வலுவான உறவொன்றை பேண டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுப்பார் என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் எதிர்வரும் கால தொடர்புகள் மிகவும் நல்ல நிலைமையில் காணப்பட கூடும் என நம்பிக்கை கொள்ளலாம் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை டிரம்பின் வெற்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கைக்கு அழுத்தத்தை பிரயோகிக்க கூடும் என அரசியல் ஆலோசகரான பேராசிரியர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு பிரயோகிக்கப்படும் அழுத்தங்களில் அதிகமாக நன்மைகளும் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டிரம்பிற்கு எதிராக போட்டியிட்ட ஹிலரி கிளின்டன், புலம்பெயர் தமிழர்களிடம் உதவிகளை பெற்றுக் கொண்டுள்ளார். அதற்கமைய அவர் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார் இலங்கைக்கு கடினமான ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கும். இதன் மூலம் பாரியதொரு ஆபத்திலிருந்து இலங்கை காப்பாற்றப்பட்டுள்ளது.
ஹிலரியின் தோல்வி மற்றும் டொனால்ட் ட்ரம்பின் வெற்றி இலங்கைக்கு அரசியல் பாடங்கள் பலவற்றை கற்பிக்கின்றது.
இலங்கையில் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஏற்பட்ட வெற்றியின் மூலோபாயத்தை செயற்படுத்திய ஹலரி கிளின்டன் தோல்வியடைந்துள்ளார்.
அதற்கமைய சிறுபான்மையினர் அனைவரையும் இணைத்துக் கொண்டு பெரும்பான்மையினரில் சிறிய பகுதியினரின் வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியும் என்ற கருத்தில் அவர் தோல்வி கண்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பின்பற்றியதும் இந்த முறை என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆக மொத்தத்தில் டொனால்ட் ட்ரம்பின் வருகையின் காரணமாக இலங்கை அரசியல் எவ்வித பாதிப்புக்களையும் ஏற்படுத்தாது என்பது இவர்களின் கருத்தின் மூலம் உறுதியாகியுள்ளது.
கடந்த ஒபாமா நிர்வாகத்தின் கீழ் மஹிந்த அரசாங்கம் பல்வேறு நெருக்கடி சந்தித்தபோதும், சமகால அரசாங்கம் ஏற்படுவதற்கும் பிரதான காரணமாக அவர்களே காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.