டோனியின் திடீர் ஓய்வுக்கு காரணம் என்ன? 

348
இந்திய அணித்தலைவர் டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென்று ஓய்வு அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் கடைசி வரை ஆடிய டோனி போட்டியை டிரா செய்தார். அதே நேரத்தில் அவுஸ்திரேலிய அணி தொடரையும் கைப்பற்றியது.

டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்த டோனி போட்டி முடிந்ததுமே தனது ஓய்வை அறிவித்தார்.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:-

மெல்போர்ன் டெஸ்ட் போட்டி முடிந்ததும், டோனி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போகிறேன் என்று கூறினார்.

நான் உடனே காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்று கேட்டேன். அவர் அமைதியாக “நன்மைக்காகவே ஓய்வு முடிவு எடுக்கிறேன்” என்று தெரிவித்தார்.

இருப்பினும் சக வீரர்களிடம் இந்த முடிவை கூறிய பிறகு, அதிகாரப்பூர்வமாக அறிவியுங்கள் என்றும் டோனி என்னிடம் தெரிவித்தார்.

இதன் நடுவே நான், தெரிவுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் மற்றும் சிவலால் யாதவுக்கு இத்தகவலை தெரிவித்தேன். இருவருமே, டோனியின் விருப்பத்தை மதித்து நடப்பது தான் நல்லது என்று தெரிவித்தனர்.

டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கும் முன்பே ஓய்வு பெறும் யோசனையை டோனி கூறியிருந்தார். மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் அவர் ஒருவரே அணித்தலைவராக இருப்பதால் ஏற்பட்ட சுமையை உணர ஆரம்பித்ததால் அந்த முடிவுக்கு வந்திருக்கலாம்.

அதே நேரம் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான அணித்தலைவராக டோனியே தொடருவார் என்று தெரிவித்துள்ளார்.

SHARE