சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், டோனியைப் பார்க்க அத்துமீறி மைதானத்தில் நுழைந்த கல்லூரி மாணவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐ.பி.எல் டி20 தொடர் வரும் 23ஆம் திகதி தொடங்க உள்ளது. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடினர்.
நேற்று முன்தினம் நடந்த இந்தப் போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது இளைஞர் ஒருவர் பாதுகாப்பை மீறி, தடுப்புச் சுவரைத் தாண்டி மைதானத்திற்குள் புகுந்தார்.
அதனைப் பார்த்த டோனி, அவரிடம் சிக்காமல் ஓடி விளையாட்டு காட்டினார். பின்னர் அந்த இளைஞரை டோனி கட்டியணைத்தால் மகிழ்ச்சியுடன் அவர் வெளியேறினார்.
Catch Me If You Fan #AnbuDen Version! #SuperPricelessThala @msdhoni and the smiling assassin @Lbalaji55! #WhistlePodu ?? pic.twitter.com/xvqaRKp9kB
— Chennai Super Kings (@ChennaiIPL) March 17, 2019
இதனைத் தொடர்ந்து திருவல்லிக்கேணி பொலிசார் குறித்த இளைஞர் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் மதுரை மாவட்டம், மாகாளிப்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் என்பதும், அவரது பெயர் அரவிந்த்குமார்(21) என்பதும் தெரிய வந்தது.
கிரிக்கெட் வீரர்களைப் பார்ப்பதற்காகவே மதுரையில் இருந்து வைகை விரைவு ரயில் மூலம் சென்னை வந்த அரவிந்த்குமார், மைதானத்தில் டோனியைப் பார்த்த மகிழ்ச்சியில் பாதுகாப்பை மீறி தடுப்புச் சுவரைத் தாண்டி சென்றுவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மாணவர் அரவிந்த்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தீவிர டோனி ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.