அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டவாது ஒருநாள் போட்டியில் டோனியுடன் சேர்ந்து விளையாடியது குறித்து இந்திய அணி வீரரான தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் அடிலெய்டில் நடைபெற்றடு. இதில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான டோனி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.
இவருக்கு இணையாக தினேஷ் கார்த்திக் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தார். 14 பந்துகளை சந்தித்த அவர் 25 ஓட்டங்கள் குவித்து, கீதர் ஜாதவ்க்கு பதிலாக தன்னை எடுத்தது சரியான முடிவு தான் என்பதை நிரூபித்தார்.
இந்நிலையில் தினேஷ் கார்த்திக் டோனியுடன் விளையாடியது குறித்து கூறுகையில், டோனி தன்னைப் பற்றி எழுந்த விமர்சனங்களுக்கு இந்த போட்டியின் மூலம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் டோனி, தன்னைப் பற்றி விமர்சனம் எழும் போது பேட்டின் மூலம் பதிலடி கொடுக்கிறார்.
போட்டியின் போது கடும் உஷ்ணம் இருந்ததால், அனைவருக்கும் தண்ணீர் தேவைப்பட்டது. அதுமட்டுமின்றி டோனிக்கு நிறைய சதைப்பிடிப்புகள் ஏற்பட்டன.
அவர் நீண்ட நேரம் பேட் செய்தது இன்னும் தசைப்பிடிப்புக்குக் காரணமானது. அதுவும் நான் ஆடிக்கொண்டிருக்கும் போது, நான் நிறைய ஒன்று, இரண்டு என்று ஓட்டங்களை ஓடி எடுப்பவன், அவரையும் 3-வது ஓட்டத்துக்கு நான் தள்ளிக் கொண்டிருந்தேன். அதனால் சதைப்பிடிப்பின் போது என் கூட ஓடுவதும் கடினமாக அமைந்திருக்கும்.
அடுத்த முறை நாங்கள் இருவரும் பேட் செய்ய நேர்ந்தால் அவர் நிச்சயம் எதிர்முனையில் என்னை விட கூடுதலாக பவுண்டரிகள் அடிக்கும் வீரரைத்தான் அவர் விரும்புவார் என்று நினைக்கிறேன். அவருடன் நீண்ட நாட்களுக்குப் பிறகு சேர்ந்து ஆடியது நன்றாக இருந்தது என்று கூறியுள்ளார்.