டோனி விலகியபோது தரவரிசையில் பின்தங்கியிருந்த இந்திய அணி தன்னிடம் வந்த பின்னர் முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்த கோஹ்லி

116

டோனி டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகியபோது இந்திய அணி தரவரிசையில் பின்தங்கியிருந்ததாகவும், தன்னிடம் வந்த பின்னர் முதலிடத்தில் இருப்பதாகவும் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்க உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கோஹ்லி, தனது கேப்டன்சி குறித்தும் இந்திய அணி குறித்தும் பேசினார்.

சிட்னி டெஸ்டில் வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ, 2-1 என்ற கணக்கில் அவுஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய அணி சாதனை படைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘நான் கேப்டனாகி 4 ஆண்டுகள் ஆகி விட்டன. தொடரை வென்றால் அது ஒரு மகா சாதனையே. ஏனெனில் நான் இங்கு 3வது முறையாக டெஸ்ட் அணியில் பங்கேற்று ஆடி வருகிறேன். இங்கு வெல்வது எவ்வளவு கடினம் என்பதை நான் அறிவேன்.

சில வேளைகளில் அவுஸ்திரேலியாவில் திறம்பட ஆடுவோம், ஆனால் ஒரு அணியாக வெற்றி பெறுவது என்பது மிகப்பெரிய சவாலாகவே எங்களுக்கு இருந்து வந்துள்ளது.

இதுவரை இது நிச்சயமாக பெரிய, மிகப்பெரிய தொடர் வெற்றியாகும். எனக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த அணிக்குமே.

ஏனெனில், இங்கு தான் உண்மையில் அணியின் மாற்றம் குறித்த காலகட்டம் தொடங்கியது. இதே மைதானத்தில் எம்.எஸ்.டோனி கேப்டன்சியைத் துறந்தபோது, நம்மிடம் மொத்தமாக இளம் அணியினர் இருந்தனர்.

டெஸ்ட் தரவரிசையில் ஆறோ, ஏழோ என்ற இடத்தில் தான் தொடங்கினோம். ஆனால், இப்போது உலகின் நம்பர் 1 அணியாக அவுஸ்திரேலியாவுக்கு வந்துள்ளோம். இந்த வழிமுறையை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம்.

2018ஆம் ஆண்டு நமக்கு நல்ல நிலையில் முடிந்தது. 2019 தொடக்கமும் நன்றாக அமைய வேண்டுமென்பதில் தீவிரமாக இருக்கிறோம்.

வரலாறு பற்றி பிரச்சனையில்லை, இந்த கணத்தில் வாழ்ந்து என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்துவதே முக்கியம் என்பேன் நான்.

மெல்போர்ன், அடிலெய்ட் டெஸ்ட் போன்ற வெற்றிகள்தான் அணியின் நம்பிக்கையை திடப்படுத்தும். அணியாக சரியான பாதையில் பயணிக்கிறோம் என்ற உணர்வைக் கொடுக்கும்’ என தெரிவித்துள்ளார்.

SHARE