தடையை மீறி இன்று ஜல்லிக்கட்டு: மதுரையில் பதற்றம் அதிகரிப்பு

186

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறாமல் இருக்க பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு நடக்காமல் இருக்க அனைத்துவிதமான ஏற்பாடுகளையும் செய்து வருவதாக மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு என்றால் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட முக்கிய இடங்களை மறக்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டவர்களும் இந்த இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டை ஆர்வமுடன் கண்டு கழித்து வந்தனர்.

இந்நிலையில், 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டை நடத்த முடியாத அளவிற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு தடை விதித்து உள்ளது.

இந்நிலையில், பாலமேட்டில், தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஜல்லிக்கட்டு நடக்கவில்லை என்றும், பாலமேட்டில் காளைகளை சிலர் அவிழ்த்துவிட்டனர் என்றும் மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் கூறியுள்ளார்.

இதே பிரச்சனை குறித்து இன்று காலை பேசிய மதுரை எஸ்.பி.விஜயேந்திர பிதாரியும் பாலமேட்டில் காளைகளுக்கு பூஜை மட்டுமே நடைபெற்றது என்று கூறினார்.

இந்நிலையில், அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடப்பதற்கான ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.

இந்த ஜல்லிக்கட்டை நடத்த விடாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் செய்து வருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து, அலங்காநல்லூரில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது.

SHARE