ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு வரவழைக்கும் விடயத்தில் அரசாங்கத்துக்கு உதவத் தயாராக இருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொசொன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு புதன்கிழமை மாலை கதிர்காமம் கிரிவெஹெர விகாரையில் நடைபெற்ற வழிபாடுகளின் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், உதயங்கவை கைது செய்து இலங்கைக்குக் கொண்டு வருவதற்காக அரசாங்கம் இன்டர்போல் ஊடாக சிவப்பு எச்சரிக்கை நோட்டீஸ் அளித்தது. எனினும் இன்றுவரை அரசாங்கத்தினால் அவரை கைது செய்து அழைத்து வர முடியவில்லை.
எனினும் இந்த விடயத்தில் நான் அரசுக்கு உதவத் தயாராக இருக்கின்றேன். அதன் பிரகாரம் இலங்கைக்கு வந்து நீதிமன்றத்தில் ஆஜராகி நீதியை நிலைநாட்டுமாறு நான் உதயங்க வீரதுங்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். அவர் அதனை நிறைவேற்றுவார் என்று நம்புகின்றேன். கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடும் என்ற அச்சத்தில் அரசாங்கம் அவருக்கு எதிராக போலியான பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்றும் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.