ஊழல் மோசடிக் குற்றங்களைப் புரிந்த மகிந்த ராஜபக்சவும் கோத்தபாய ராஜபக்சவும் சிறையில் இருக்க வேண்டியவர்கள் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீலட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட தனிப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
போரை நெறியாண்டமை, உத்திகளை மேற்கொண்டமைக்கான பொறுப்பை ஏற்பதாக தெரிவித்த அவர் போரின்போது எவரேனும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருந்தால் அதற்கான பொறுப்பை அவர்கள் ஏற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
தான் வெளிநாட்டில் இருந்த கால கட்டத்தில்தான் இலங்கை இறுதிப்போரின் இறுதிநாட்களில் வெள்ளைக் கொடி படுகொலைகள் இடம்பெற்றதாகவும் சரத்பொன்சேகா இதன்போது கூறியுள்ளார்.
இலங்கை அரசு போர்க்குற்றம் தொடர்பில் உள்ளக விசாரணையை வரவேற்பதாக தெரிவித்துள்ள அவர் அதன் நம்ப தன்மைக்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அழைப்பதில் தவறில்லை என்றும் தெரிவித்தார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போரை முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் காணப்பட்டார் என்றும் இதனால் அவர் அப்போது நிதானமிழந்திருந்ததாகவும் சரத்பொன்சேகா கூறியுள்ளார்.
இரண்டு லட்சம் பேரைக் கொண்ட இராணுவத்தில் ஏழு எட்டுப் பேர் குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை என்றும் அது இராணுவத்தின் பிரச்சினையல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் இராணுவத்திற்கு இறுதிப்போரின் போது வழங்கிய கட்டளைகளைமீறி குற்றங்களை இழைத்திருந்தால் அவர்களுக்கு எதிராக தண்டனை வழங்க முடியும் என்றும் அது பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை என்றும் கூறினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானத்திற்கு அஞ்சி இத்தகைய செலவில் நிலக் கீழ் மாளிகையை அமைத்த மகிந்த தரப்பினர் தலைவர்களல்ல கோழைகள் என்றும் சரத்பொன்சேகா சாடியுள்ளார்.