தனி ஒருவன் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு தடை

315

தனி ஒருவன் திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.

நடிகர் ஜெயம் ரவி, நயன்தாரா நடுத்து சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தனி ஒருவன். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்நிலையில், அப்படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துக்குத் தமிழ்த் தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது.

படம் வெளியான போது, தொலைக்காட்சி, செய்தித்தாள், எஃப்.எம் என சகல ஊடகங்களிலும் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால், சில தொலைக்காட்சி, நாளிதழ்களில் மட்டும்தான் விளம்பரம் செய்யவேண்டும் என்றொரு நடைமுறையைத் தயாரிப்பாளர் சங்கம் கொண்டுவந்துள்ள நிலையில் அதனை ஏஜிஎஸ் நிறுவனம் மீறியுள்ளதாகத் தெரிகிறது.

அதனால், ஏஜிஎஸ் நிறுவனத்துக்குத் தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதன்படி ஏஜிஎஸ் நிறுவனம் இனி படம் எதுவும் தயாரிக்கக்கூடாது. மேலும் தயாரிப்பாளர் சங்கம், ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு ஒத்துழைப்பு தராது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ள, ஏஜிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி “தனி ஒருவன் படத்தை அதிக அளவில் விளம்பரப்படுத்தியதற்காக ஏ.ஜி.எஸ் நிறுவனம் படம் தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். அதிர்ச்சியாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE