தபாலகங்கள் மூடப்பட்டுள்ளதால் பிரதேச செயலகங்களில் சேவையை வழங்குமாறு அறிவுறுத்தல்..!

158

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தபாலகங்கள் மூடப்பட்டுள்ளதுடன், சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைக்கும் பொருட்டு அந்தந்தப் பிரதேச செயலகங்களில் சேவையை வழங்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் எஸ்.எஸ்.என்.டீ. சில்வா தெரிவித்துள்ளார்.

அமைச்சின் இந்தப் பணிப்புரை மாவட்ட செயலகங்கள் ஊடாக பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தப் பணிப்புரையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போது நாட்டில் இடம்பெறும் தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பரீட்சைக் கட்டணம், தண்டப் பணம் என்பன தபால் நிலையங்கள் ஊடாக செலுத்த முடியாத காரணத்தினால் பொது மக்கள் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.

பொது மக்களின் அசௌகரியங்களை தடுப்பதற்காக தற்காலிக ஏற்பாடாக பொதுமக்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய பரீட்சைக் கட்டணம், தண்டப்பணம், போன்ற கட்டணங்களையும், அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு செலுத்த வேண்டிய முதியோர் கொடுப்பனவு போன்ற கொடுப்பனவுச் சேவைகளையும் பிரதேச செயலகம் ஊடாக செலுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக பின்பற்றுமாறும், இது தொடர்பாக பிரதேச செயலாளர்களை தெளிவுபடுத்துமாறும் அறிவிக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE