நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தமிங்க பிரசாத் விலகியுள்ளார். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அந்நாட்டு அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முன்னதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய அணியுடன் இலங்கை அணி விளையாடியது. இதில் தமிங்க பிரசாத்க்கு முதுகு புறத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் 4 ஓவர்கள் வீசிய நிலையில் வெளியேறினார். இந்த காயம் காரணமாக அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக விஷ்வா பெர்னாண்டோ அணியில் இணைந்துக் கொள்ளப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் விளையாடவில்லை. இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தமிங்க பிரசாத் டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருப்பது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஒருநாள் தொடருக்கு முன்னதாக குணமடைந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. |