தமிழகம்- கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் இன்று திருமணத்துக்காக நடந்தே வந்த மணப்பெண்கள்

276

கர்நாடகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இன்று திருமணம் நடக்க உள்ள நிலையில் தமிழக எல்லை வரை மணப்பெண்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்தனர்.

வன்முறை

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பல இடங்களில் வன்முறை நடந்து வருகிறது. இதனால் தமிழகம்- கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மேலும் இரு மாநில எல்லைகளான ஓசூர் ஜூஜூவாடி மற்றும் அத்திப்பள்ளியில் போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று காலை முதல் மாநில எல்லையில் ஆயுதம் ஏந்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சொந்த ஊர் திரும்புகிறார்கள்

கர்நாடக மாநிலத்தில் பதற்றம் சற்று தணிந்ததை தொடர்ந்து ஓசூரில் இருந்து ஜூஜூவாடி நினைவு வளைவு வரை தமிழக அரசு பஸ்கள் நேற்று மதியம் முதல் இயக்கப்பட்டன. அதில் பெங்களூரு செல்ல இருந்த பயணிகள் சென்றனர்.

அதே சமயம் கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் உயிருக்கு பயந்து, தங்களின் சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சுகளுடன் திரும்ப தொடங்கி உள்ளனர்.
நடந்து வந்த மணமக்கள்

பெங்களூருவில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த மணமக்கள் ரஞ்சித்-சவுமியாவிற்கு இன்று (புதன்கிழமை) திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக திருமண வீட்டார் பெங்களூருவில் இருந்து அத்திப்பள்ளி வரை கர்நாடக மாநில பஸ்களில் வந்தனர். பின்னர் அங்கிருந்து பல கிலோ மீட்டர் தூரம் நடந்து தங்கள் பொருட் களுடன் ஓசூருக்கு வந்தனர்.
இதே போல் பெங்களூருவில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த பிரேமாவுக்கு (வயது 25) தமிழகத்தில் வசிக்கும் வாலிபருடன் வாணியம்பாடியில் இன்று திருமணம் நடக்க இருக்கிறது. இதற்காக பெங்களூருவில் இருந்து பிரேமா தன் உறவினர்கள் சிலருடன் கர்நாடக மாநில எல்லை வரை பல்வேறு வாகனங்களில் வந்தார். பின்னர் பல கிலோமீட்டர் தூரம் அவர்கள் தமிழக எல்லையான ஓசூரை நடந்தே கடந்து வந்தனர்.

மறக்க முடியாத சம்பவம்

இது குறித்து மணமகள் பிரேமா கூறியதாவது:-

நாங்கள் ஓசூர் வரும் வரை பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டோம். காவிரி பிரச்சினையால் இரு மாநில மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு அல்ல. இரு மாநிலத்தில் உள்ளவர்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டும். நாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வு ஏற்பட வேண்டும்.

என்னுடைய திருமணத்துக்கு 600-க்கும் மேற்பட்ட உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தோம். ஆனால் வெறும் 20 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதனால் என்னுடைய திருமண நிகழ்ச்சி களை இழந்து விட்டது. எனினும் இது எனக்கு மறக்க முடியாத ஒரு சம்பவமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.walking

SHARE